கட்டுரை

நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்

Josiah Prathaban

13 பெப்ரவரி 2026

நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்

தேவன் இந்த உலகத்தை எவ்வளவு மகிமையாய்ப் படைத்தார் என்பதையும், பாவத்தின் பிரவேசத்தினால் மனுக்குலம் அடைந்த அந்தகார நிலையையும் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால், தமது தயையுள்ள சித்தத்தின்படி நமக்காக ஒரு மீட்பின் திட்டத்தை நியமித்தார். அந்தத் திட்டத்தை அவர் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, இன்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மைப் பரிசுத்தமாக்கித் தமது கிருபையினால் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தத் தியானத்தின் ஊடாக, கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத்தையும், அவர் நமக்குக் கொடுத்துள்ள உன்னதமான பணியையும், நித்திய நம்பிக்கையையும் விரிவாகத் தியானிக்கப்போகிறோம்.

1. சிருஷ்டிப்பு: தேவனுடைய பூரணமான படைப்பும் நோக்கமும்

தேவன் ஒருவரே சர்வத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தர். பரிசுத்த வேதாகமம் ஆரம்பிக்கும் பொழுதே “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” () என்று கூறுகிறது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." () அனைத்தும் அவரிடமிருந்தே தொடங்குகின்றன. அவர் ஒருவரே நித்தியமானவர், சுயம்புவானவர் (Self-Existent) மற்றும் சர்வவல்லமையுள்ளவர். "கர்த்தருடையவார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது." ().

அனால் இன்றய உலகம் பல வித்தியாசமான கண்ணோட்டங்களை கொண்டுள்ளது. நவீன அறிவியல், அண்டத்தையும் உயிரினங்களையும் இயற்கைச் செயல்முறைகளின் வழியாக விளக்குவதோடு, காலப்போக்கில் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதையும் உயிரினங்கள் எவ்வாறு மாற்றமடைந்து பன்முகத்தன்மை கொண்டன என்பதையும் விவரிக்கிறது. சிலர் இந்த விளக்கங்களை வைத்துக்கொண்டு, அனைத்தும் தற்செயலானது என்றும் நோக்கம் அற்றது என்றும் கருதுகின்றனர்; ஆனால் இத்தகைய முடிவுகள் அறிவியல் நிரூபிக்கக்கூடிய எல்லைக்கு அப்பாற்பட்டவை. அறிவியலுக்கு அப்பால், வேறு சில உலகக் கண்ணோட்டங்களும் உள்ளன. உதாரணமாக, யதார்த்தத்தை வெறும் பருப்பொருள் (Matter) சார்ந்ததாக மட்டும் பார்க்கும் தத்துவங்கள்(Philosophical naturalism), மனித அறிவு மற்றும் விழுமியங்களுக்குள் அர்த்தத்தைத் தேடும் மனிதநேயம் (Humanism), பிரபஞ்சம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்று நம்பும் பார்வைகள், மற்றும் ஒரு உயர்ந்த ஆற்றல் அல்லது படைப்பாளரை நம்பும் ஆன்மீகக் கண்ணோட்டங்கள். இந்த பல்வேறு பார்வைகளுக்கு மத்தியில், பரிசுத்த வேதாகமம் ஒரு தெளிவான மற்றும் தனித்துவமான உண்மையை முன்வைக்கின்றன, படைப்பு என்பது தற்செயலானதோ அல்லது அர்த்தமற்றதோ அல்ல, அது தேவனுடைய சித்தத்தினால் உருவான ஒரு செயல். வேதாகமம் கூறுகிறது “கர்த்தாவே,தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.” (). வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, இந்த பிரபஞ்சமும் நாம் அதில் காணும் அனைத்தும், ஞானமும் இறையாண்மையும் கொண்ட ஒரு படைப்பாளரின் திட்டமிட்ட வடிவமைப்பையே பிரதிபலிக்கின்றன.

தேவன் தமது தேவையினாலோ அல்லது தனிமையினாலோ எதையும் படைக்கவில்லை. அவர் தமக்குள் முழுமையானவர், அவர் எதிலும் தங்கியிருப்பவரும் அல்ல. "உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை." (). மாறாக, தேவன் தமது மகிமையை வெளிப்படுத்தவும், தமது வல்லமை, ஞானம் மற்றும் அன்பை வெளிப்படுத்தவும், தமது சித்தத்தினாலும் நன்மையினாலும் அனைத்தையும் படைத்தார். (), (), (), ().

தேவன் மனிதனைத் தமது சாயலில் படைத்துத் தனது படைப்பிற்கு முடிசூட்டினார். "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்." (). அவர் மனிதகுலத்திற்கு ஒரு சிறப்பு கௌரவத்தையும் பொறுப்பையும் அளித்தார்: "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." (). மனிதகுலம் தேவனுடைய குணாதிசயங்களை பிரதிபலிக்கவும், அவருடைய அதிகாரத்தின் கீழ் இவ்வுலகத்தை ஆளவும் படைக்கப்பட்டது. இத்தகைய கண்ணியத்தைப் பெற நாம் தகுதியற்றவர்களாக இருந்தபோதிலும், தேவன் கிருபையாக நாம் அவரை அறிந்துகொள்ளவும் அவரை சேவிக்கவும் தக்க சிலாக்கியத்தை தந்தார் ().

தேவன் மனிதகுலத்திற்கு 'சுயாதீன விருப்பம்' (Free will) அதாவது அவரை நேசிப்பதற்கும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கும் தேர்ந்தெடுக்கும் திறனையும் அளித்தார். "தேவனாகியகர்த்தர்மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்." (). தேவன் கட்டாயப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலை அல்ல, மாறாக விருப்பத்துடன்கூடிய கீழ்ப்படிதலையும் அன்பின் அடிப்படையிலான உறவையும் விரும்பினார். "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்." (), "நீ உன் தேவனாகியகர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக." ().

அனைத்தையும் படைத்த பிறகு, தேவன் தமது கிரியைகளை பூரணமானவை என்றும் நல்லவை என்றும் அறிவித்தார். "அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது." (). அங்கே பாவமும் மரணமும் இருக்கவில்லை; அங்கே சமாதானமும், சந்தோஷமும் மட்டுமே இருந்தது. தேவன் படைத்த அனைத்தும் நன்றாக இருந்தது, பாவம் உலகில் நுழையும் வரை மனிதகுலம் அவருடன் பூரண ஐக்கியத்தில் வாழ்ந்தது.

பிரபஞ்சமும் நாம் அதில் காணும் அனைத்தும் உருவாவதற்கு முன்னரே தேவன் இருந்தார், அவர் நித்தியமானவர், தமக்குள்ளேயே நிறைவானவர் மற்றும் மகிமை பொருந்தியவர். அவர் ஏதோ ஒரு தேவையினால் எதையும் படைக்கவில்லை, மாறாகத் தமது சுபாவத்தின் அளவற்ற நன்மையினால் அனைத்தையும் படைத்தார். படைக்கப்பட்ட ஒவோன்றும் அவருடைய மகிமையை அறிவிக்கவே இருக்கின்றன ().

அவருடைய சாயலில் படைக்கப்பட்டவர்களாகிய நாம், நமது வாழ்வின் மூலமும், இந்தப் படைப்புகளை ஆளுவதன் மூலமும் அவருடைய குணாதிசயங்களை பிரதிபலிக்கப் படைக்கப்பட்டோம். நமது நோக்கம் சுய திருப்தி அல்ல, மாறாக தேவனை மகிமைப்படுத்துவதே ஆகும். நாம் அவருடைய மகிமைக்காக வாழும்போதுதான், நமது ஆழமான மகிழ்ச்சியையும் நோக்கத்தையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் கண்டடைய முடியும்.

ஒரு நிமிடம் சிந்தித்து பாப்போம், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவர் எம்மை ஒரு நோக்கத்தோடு, தமது சாயலில், தமக்காக உருவாக்கினார். இந்த உலகில் எங்களை ஒரு உரிமையாளராக அல்ல, மாறாக ஒரு பொறுப்பாளராக (Steward) அவர் வைத்திருக்கிறார். எங்கள் மதிப்பு நாங்கள் எதைச் சாதிக்கிறோம் என்பதில் அல்ல மாறாக, நாங்கள் தேவனால், அவருடைய சாயலில், அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையிலே உள்ளது ().

2. வீழ்ச்சி: தேவமகிமையின் இழப்பும் கறைபட்ட சுபாவமும்

தேவன் உலகத்தைப் பூரணமானதாகவும் நல்லதாகவும் படைத்தார் என்று பார்த்தோம், ஆனால் மனிதகுலம் அந்த நிலையிலேயே நிலைத்திருக்கவில்லை. ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் தேவனுடைய தெளிவான கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். சர்ப்பத்தினால் (சாத்தானினால்) சோதிக்கப்பட்ட அவர்கள், தேவனை நம்பி கீழ்ப்படிவதத்கு பதிலாகத் தங்களையே நம்பத் தேர்ந்தெடுத்தனர் "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." (). இந்த கீழ்ப்படியாமையின் செயல் பேரழிவு தரும் விளைவுகளைக் கொண்டுவந்தது. இந்த ஒரு பாவத்தின் மூலம், படைப்பிற்குள் சாபம் நுழைந்தது என்றும், அதைத் தொடர்ந்து மரணம் வந்தது என்றும் வேதாகமம் கூறுகிறது. "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று." ().

வீழ்ச்சி என்பது ஒரு சிறிய தவறால் நடந்த ஒன்று அல்ல. அது தேவனுடைய அதிகாரத்தை நிராகரித்ததின் விளைவு. இதன் விளைவாக, பாவம் மனித சுபாவத்தின் ஒவ்வொரு பகுதியையும் சீர்கெடுத்ததுடன், முழுப் படைப்பையும் பாதித்தது. வேதனை, துன்பம், முறிந்த உறவுகள் மற்றும் உடல் ரீதியான மரணம் ஆகியவை உலகில் நுழைந்தன (). அந்தத் தருணத்திலிருந்து, எல்லா மக்களும் பாவத்தின் அதிகாரத்தின் கீழ் பிறந்தனர். "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி." ().

ஆதாம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பிரதிநிதியாக செயல்பட்டான். அவன் படைக்கப்பட்ட முதல் மனிதன் மட்டுமல்ல, மனித இனத்தின் தலைவனாகவும் இருந்தான். ஏதேன் தோட்டத்தில் அவன் பாவம் செய்து விழுந்தபோது, அந்த ஒரு செயலின் மூலம் சாபம் இந்த உலகிற்குள் நுழைந்தது. அந்தச் சாபம் ஆதாமுடன் நின்றுவிடாமல், அவனுடைய சந்ததியினராகிய நமக்கும் கடத்தப்பட்டது. "மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல" (). உலகம் ஏன் உடைந்து போயிருக்கிறது என்பதையும், ஒவ்வொரு மனித இதயமும் ஏன் பாவத்தின் பக்கம் சாய்ந்திருக்கிறது என்பதையும் இந்த வீழ்ச்சி விளக்குகிறது. இந்த யதார்த்தமானது, சபிக்கப்பட்ட இந்த உலகில் வாழும் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய தலையீடு எவ்வளவு அவசியம் என்பதைக் காட்டுகிறது.

பாவம் என்பது நாம் செய்யும் தற்செயலான தவறல்ல; அது வீழ்ச்சியின் விளைவாக நமது சுபாவத்திற்குள்ளேயே ஊடுருவிய ஆழமான சீர்கேடு ஆகும். நாம் பாவம் செய்வதால் பாவிகளாக மாறவில்லை, மாறாகப் பாவச் சுபாவத்துடன் பிறந்திருப்பதாலேயே பாவம் செய்கிறோம் என்பதை வேதாகமம் நமக்கு கூறுகிறது. இன்று உலகிலும் நமக்குள்ளும் நாம் காணும் அனைத்து சீர்கேடுகளுக்கும் இந்த வீழ்ச்சியே உண்மையான காரணமாகும். இந்த ஆவிக்குரிய வீழ்ச்சியைப் புரிந்துகொள்வது, ஏன் இந்த சபிக்கப்பட்ட உலகத்தால் தன்னைத்தானே மீட்டெடுத்துக் கொள்ள முடியாது என்பதையும், மனிதனுடைய தீர்வுகள் மற்றும் முயற்சிகள் ஏன் எப்போதும் குறைவுள்ளவையாகவே இருக்கின்றன என்பதையும் உணர உதவுகிறது.

3. ஆவிக்குரிய மரணம்: பாவத்தின் அடிமைத்தனமும் அந்தகார நிலையும்

வீழ்ச்சியின் காரணமாக, மனிதகுலத்தின் நிலை நாம் நினைப்பதை விட மிகவும் மோசமானதாக இருக்கிறது. வேதாகமம் நம்மை ஆவிக்குரிய ரீதியில் மரித்தவர்கள் என்று வர்ணிக்கிறது; நாம் வெறும் நோயுற்றவர்களோ அல்லது பலவீனமானவர்களோ அல்ல. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." (). ஆவிக்குரிய மரணம் என்பது தேவனிடமிருந்து பிரிந்திருப்பதையும், நம்மை நாமே மீண்டும் அவரிடம் சேர்த்துக்கொள்ளும் திறனை முற்றிலும் இழந்துவிட்டதையும் குறிக்கிறது.

பாவம் நம்மை அடிமைப்படுத்தியுள்ளது. "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (). தேவனுடைய கிருபையின்றி, நாம் அவரைத் தேடுவதில்லை அல்லது நீதியை விரும்புவதில்லை. "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை." (). நமது இருதயங்கள் அதன் ஆழத்திலேயே சீர்கெட்டுப்போயுள்ளன: "எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" ().

மனிதர்கள் இன்னும் தெரிவுகளைச் செய்யும் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், நமது விருப்பங்கள் (will) நமது பாவ சுபாவத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது இருதயம் எதை விரும்புகிறதோ, அதையே நாம் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கிறோம், தேவன் இல்லாமல், நமது விருப்பங்கள் பாவமானவையாகவே இருக்கின்றன. நமது மிகச்சிறந்த முயற்சிகளும் கூட நம்மை இரட்சிக்க முடியாது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." (). எந்தவொரு ஒழுக்க முயற்சியோ, மதச் சடங்கோ அல்லது நல்ல எண்ணமோ நம்மை தேவனுக்கு முன்பாக சரியானவர்களாக மாற்ற முடியாது.

இதன் பொருள் என்னவென்றால், இரட்சிப்பு என்பது நமக்கு வெளியிலிருந்து வர வேண்டும். தேவன் முதலில் செயல்படாவிட்டால், நமக்கு நம்பிக்கையே இல்லை. நமது உண்மையான நிலையைப் புரிந்துகொள்வது, கிறிஸ்துவில் வெளிப்படும் தேவனுடைய கிருபையின் ஐஸ்வரியத்தையும் வல்லமையையும் காண நம்மைத் தயார்படுத்துகிறது.

இந்த உண்மை நம்முடைய ஒன்றுக்கும் உதவாத நிலைமையை காட்டுகிறது. ஆவிக்குரிய மரணம் என்பது ஆதாமின் பாவத்தால் விளைந்த ஆழமான பிரிவினையாகும். இது மனிதனை ஆவிக்குரிய ரீதியில் உயிரற்றவனாகவும், பாவத்திற்கு அடிமையானவனாகவும் மாற்றியுள்ளது. ஒரு பிணத்தைப் போல, மனிதன் தானாகத் தேவனைத் தேடவோ அல்லது அவரிடம் திரும்பவோ முடியாத தார்மீக இயலாமையில் இருக்கிறான். இந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதன் மீட்பு பெற வேண்டுமானால், தேவனுடைய புதுப்பிக்கும் வல்லமையானது அவனுக்குள் செயல்படுவது அவசியமாகிறது. தேவன் நம்மை உயிர்ப்பித்தால் மட்டுமே நம்மால் விசுவாசிக்கவும், புதிய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

4. வாக்குத்தத்தம்: இரட்சகர் குறித்த நிழல்களும் தீர்க்கதரிசனங்களும்

மரித்த நிலையில் இருக்கும் நம்மைத் தேவன் உயிர்ப்பித்தால் ஒழிய நமக்கு மீட்பு சாத்தியமில்லை என்று பார்த்தோம். உலகில் பாவம் நுழைந்த அந்தத் தருணத்திலேயே, தேவன் தமது மீட்பின் திட்டத்தை வெளிப்படுத்தினார். வீழ்ச்சி நடந்த அந்த நாளிலேயே, ஸ்திரீயின் வித்தானது சாத்தானின் தலையை நசுக்கி, பாவத்தின் சாபத்தை அழிக்கும் என்ற முதல் சுவிசேஷ வாக்குறுதியை தேவன் அளித்தார் (). அந்தத் தருணத்திலிருந்து, தேவன் மனித வரலாற்றின் நிஜ நிகழ்வுகள் மற்றும் உடன்படிக்கைகள் வழியாகத் தமது இரட்சிப்பின் திட்டத்தைப் படிப்படியாக வெளிப்படுத்தினார்.

வரலாறு முழுவதும், தேவன் 'பதிலாள்' (Substitution) மற்றும் 'விடுதலை' குறித்த தெளிவான சித்திரங்களை வழங்கினார். ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலியிடக் கட்டளையிடப்பட்டபோது, தேவன் அவரைத் தடுத்து, ஈசாக்கிற்குப் பதிலாக மரிக்க ஒரு ஆட்டுக்கடாவை வழங்கினார் (). இரட்சிப்பு என்பது மனித முயற்சியால் அல்ல, தேவன் தேர்ந்தெடுக்கும் ஒரு பதிலாள் மூலமாகவே வரும் என்பதை இது வெளிப்படுத்தியது. ஆபிரகாம் பலியை வழங்கவில்லை, தேவனே வழங்கினார்.

இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்த காலத்தில், தேவன் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு அதன் இரத்தத்தைத் தங்கள் நிலைகளில் பூசும்படி கட்டளையிட்டார். அந்த இரத்தத்தினால் மூடப்பட்டிருந்த ஒவ்வொரு வீட்டையும் நியாயத்தீர்ப்பு கடந்து சென்றது (Pass over), இரத்தம் இல்லாத வீடுகளில் மரணம் சம்பவித்தது (). நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலை பெற மாசற்ற இரத்தம் அவசியம் என்பதை இது போதித்தது. பின்னர் வனாந்தரத்தில், மக்கள் தங்கள் பாவத்தினால் மரித்துக் கொண்டிருந்தபோது, மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உயர்த்தும்படி தேவன் கட்டளையிட்டார், அதை நோக்கிப் பார்த்த எவனும் பிழைத்தான் (). குணமடைதலும் வாழ்வும் கிரியைகளால் வரவில்லை, மாறாக தேவனுடைய ஏற்பாட்டை விசுவாசிப்பதன் மூலமே வந்தது.

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் பலி செலுத்தும் முறையையும் தேவன் ஏற்படுத்தினார். பாவநிவாரண பலிகள், குற்றநிவாரண பலிகள் மற்றும் பாவநிவிர்த்தி நாள் ஆகிய அனைத்தும் ஒரே பாடத்தையே போதித்தன "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." (). இருப்பினும், இந்தப் பலிகள் பாவத்தை நிரந்தரமாக நீக்க ஒருபோதும் உத்தேசிக்கப்படவில்லை. வேதாகமம் விளக்குகிறது "இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்தவருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது." (). ஒவ்வொரு பலியும் தேவன் தாமே வழங்கவிருந்த ஒரு மேலான, இறுதியான பலியை நோக்கியே சுட்டிக்காட்டின.

வரலாறு முழுவதும், தேவன் தமது மக்களை அடிமைத்தனம் மற்றும் மீட்பின் மாதிரிகள் (patterns) ஊடாக வழிநடத்தினார். மக்கள் மீண்டும் மீண்டும் பாவத்தினால் நியாயத்தீர்ப்பு, அடிமைத்தனம் அல்லது சிறைவாசத்திற்கு உட்பட்டனர்; ஒவ்வொரு முறையும் தேவன் தமது வல்லமையினால் மட்டுமே அவர்களை மீட்டார். யோசேப்பு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது முதல், இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டது வரை, மற்றும் நியாயாதிபதிகளின் காலத்தில் நடந்த ஒடுக்குமுறை மற்றும் இரட்சிப்பின் தொடர்ச்சியான சுழற்சிகள் வரை, அவருடைய மக்களால் தங்களைத் தாங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது என்றும் தேவன் ஒருவரே இரட்சிக்க வல்லவர் என்னும் உண்மையை வெளிப்படுத்தினார் “நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (). இந்த ஒவ்வொரு விடுதலையும் தற்காலிகமானதாகவும் முழுமையற்றதாகவுமே இருந்தது. இவை தேவன் தாமே வழங்கவிருந்த ஒரு மேலான மற்றும் இறுதியான விடுதலையை நோக்கியே சுட்டிக்காட்டின.

இந்த வரலாற்று நிகழ்வுகளுடன், தேவன் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் பேசினார். மற்றவர்களின் அக்கிரமங்களினிமித்தம் காயப்பட்டு, பாடுகளின் வழியே கடந்துசென்று, பாவிகளுக்கும் தேவனுக்கும் இடையே சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு நீதியுள்ள ஊழியக்காரனைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார் (). மேலும், தாவீது ராஜா மெசியாவின் மரண வேதனையை விவரிக்கும்போது, அவருடைய கைகளும் கால்களும் உருவக் குத்தப்படுவதையும், அவர் தேவனாலே கைவிடப்பட்ட நிலையில் அனுபவிக்கும் அந்தப் பெரும் துக்கமே பூமியின் எல்லைகளெங்கும் உள்ள தேசங்கள் கர்த்தரிடத்தில் திரும்புவதற்குக் காரணமாகும் என்பதையும் எழுதினார் (). இவற்றுடன், மேசியா "சங்கரிக்கப்படுவதன்" மூலமாகப் பாவத்தைத் தொலைத்து, நமக்கு "நித்திய நீதியை" கொண்டுவருவார் என்று தானியேல் முன்னறிவித்தார் (). எருசலேம் குடிகளுக்குப் பாவத்தையும் அழுக்கையும் நீக்க ஒரு "ஊற்று" திறக்கப்படும் என்று சகரியாவும் முன்னறிவித்தார் (). வரவிருக்கும் இரட்சகர் எதிரிகளை வெல்வதற்க்கு அப்பால், பாவிகளை மீட்கத் துன்பங்களையும் அனுபவிப்பார் என்பதைத் தீர்க்கதரிசிகள் தொடர்ந்து வெளிப்படுத்தினர்.

தலைமுறை தலைமுறையாக, தேவன் தமது ஜனங்களுக்குக் காத்திருக்கவும், நம்பவும், விசுவாசிக்கவும் போதித்து வந்தார். பழைய ஏற்பாடு என்பது எதிர்பார்ப்பின் தொடர்ச்சியான ஒரு வரலாறாகும். ஒவ்வொரு உடன்படிக்கையும், ஒவ்வொரு பலியும், ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் அதே செய்தியைப் பிரகடனப்படுத்துகின்றன: பாவம் மரணத்தைக் கொண்டுவருகிறது, மனிதகுலத்தால் தன்னைத்தானே இரட்சிக்க முடியாது, மேலும் தேவன் ஒரு இரட்சகரை வாக்குறுதி அளித்துள்ளார்.

தேவனுடைய மீட்பின் திட்டம், இரட்சகர் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றில் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது. இது இரட்சிப்பு என்பது மனிதனின் தேடல் அல்ல, மாறாகத் தேவன் மனிதனைத் தேடி வரும் செயல் என்பதை நினைவூட்டுகிறது. தேவன் எவ்வளவு கவனமாகவும் உண்மையாகவும் வழியை ஆயத்தப்படுத்தினார் என்பதை நாம் காணும்போது, அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் தவறுவதில்லை என்ற நமது விசுவாசம் உறுதிப்படுகிறது.

5. மேசியா: வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகராகிய இயேசு கிறிஸ்து

காலம் நிறைவேறினபோது, தேவன் தமது நித்திய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார். வேதாகமத்தில் நிழல்களாகக் காண்பிக்கப்பட்ட இரட்சகர், வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மாம்சத்தில் வெளிப்பட்டார். இயேசு கிறிஸ்துவே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா; தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டவரும், உடன்படிக்கைகள் மற்றும் பலிகள் மூலம் நிழலாட்டங்களாகக் காண்பிக்கப்பட்ட நிஜமும் அவரே. அவர் ஒரு கன்னிகையிடத்தில் பிறந்ததன் மூலம் (), பாவ சுபாவமற்ற புதிய மனிதகுலத்தின் தொடக்கமாக வந்தார். அவர் முழுமையான தேவனாகவும் முழுமையான மனிதனாகவும் வெளிப்படுத்தப்பட்டார் ().

இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியோ அல்லது ஒரு போதகரோ அல்ல; அவர் தேவனுடைய நித்திய குமாரன். வார்த்தையானவர் மாம்சமாகி, நம்மிடையே வாசம் பண்ணினார். முதல் ஆதாமாகிய பிரதிநிதி எங்கே தோல்வியுற்றானோ, அங்கே இயேசு பூரணமாகக் கீழ்ப்படிந்தார். வேதாகமம் அவரை 'இரண்டாம் ஆதாம்' என்று அழைக்கிறது. முதல் ஆதாம் தனது கீழ்ப்படியாமையினால் மரணத்தையும் ஆக்கினையையும் கொண்டுவந்த இடத்தில், இந்த இரண்டாம் ஆதாம் தமது பூரண கீழ்ப்படிதலினால் நீதியையும் நித்திய ஜீவனையும் கொண்டுவந்தார் ().

இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், இயேசு நமக்காகப் பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள ஒரு வாழ்க்கையைச் சம்பாதித்தார். அவர் நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார், இருப்பினும் ஒருபோதும் பாவம் செய்யவில்லை (). அவர் பிதாவினுடைய சித்தத்தைத் தமது உணவாகக் கொண்டு, தேவனைப் பூரணமாக நேசித்தார். அவர் தேவனுக்குச் சமமாயிருந்தும், அந்த மகிமையைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடாமல், ஒரு அடிமையின் ரூபமெடுத்துத் தம்மைத்தாமே வெறுமையாக்கினார் ().

இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு கட்டளைக்கும் பூரணமாகக் கீழ்ப்படிந்தார் (). அவர் தமக்காக நீதிமானாகும்படி இதைப் புரியவில்லை; மாறாக, தாம் இரட்சிக்க வந்த தமது ஜனங்களின் பிரதிநிதியாகவே இக்கீழ்ப்படிதலை நிறைவேற்றினார் (). ஆதாமுக்குப் பின் வந்த மனிதகுலம் தேவனுடைய பரிசுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியத் தவறி, நீதியற்றவர்களாய் நின்ற இடத்தில், இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து அந்த ஒவ்வொரு கட்டளையையும் பூரணமாய் நிறைவேற்றி, நமக்காக ஒரு "நீதியின் வஸ்திரத்தை" ஆயத்தப்படுத்தினார் (). தமது தாழ்மை மற்றும் பாவமற்ற வாழ்வினால், அவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தகுதியுள்ள "தேவ ஆட்டுக்குட்டியாகவும்", தேவனையும் மனுஷனையும் ஒப்புரவாக்குகிற "நீதியுள்ள மத்தியஸ்தராகவும்" தம்மை நிலைநாட்டினார் ()).

இயேசு கிறிஸ்து வெறும் ஒரு போதகராக மட்டும் வரவில்லை; அவர் தமது ஜனங்களுக்கே "நீதியாகவே" மாறினார். தேவனுடைய உயர்ந்த பரிசுத்த தரத்திற்கு ஒருபோதும் கீழ்ப்படிய முடியாத பாவிகளுக்கு, கிறிஸ்துவின் இந்தப் பூரண கீழ்ப்படிதலே நித்திய நம்பிக்கையாய் இருக்கிறது. நாம் விசுவாசத்தினாலே கிறிஸ்துவைப்பற்றிக்கொள்ளும்போது, நம்முடைய பாவங்களும் தோல்விகளும் அவருடைய கணக்கிலும், அவருடைய பூரண நீதியும் வெற்றியும் நம்முடைய கணக்கிலும் ஏற்றப்படுகிறது. இந்த "மகத்துவமான பரிமாற்றமே" நற்செய்தியின் சாரம்; இதினாலே நாம் தகுதியற்றவர்களாயிருந்தும், கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக நிற்கிறோம்.

6. சிலுவை: பாவநிவாரண பலியும் ஒப்புரவாக்குதலின் விலையும்

இயேசு வாழ்ந்த அந்தப் பூரண கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை, பிதாவினுடைய திட்டத்தின்படியே அவரைச் சிலுவையை நோக்கி வழிநடத்தியது. சிலுவை என்பது ஏதோ ஒரு விபத்தோ அல்லது சோகமான நிகழ்வோ அல்ல, அது இரட்சிப்பிற்காக தேவனால் நியமிக்கப்பட்ட ஒரே வழியாகும். இயேசு எல்லாவற்றிலும் பிதாவுக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தார், மரணம் வரைக்கும் அவர் கீழ்ப்படிந்தவரானார் (). பழைய ஏற்பாட்டுப் பலிகள் அனைத்தும் எதைச் சுட்டிக்காட்டினவோ, அந்தப் பூரணமான "தேவ ஆட்டுக்குட்டியாகவே" அவர் பலிபீடத்திற்குச் சென்றார் ().

சிலுவையில் ஒரு மாபெரும் பரிமாற்றம் நிகழ்ந்தது. பாவமற்றவராகிய இயேசு, தமது ஜனங்களுடைய பாவங்கள் அனைத்தையும் தன்மேல் ஏற்றுக்கொண்டார் (). அந்தத் தருணத்தில், பரிசுத்தராகிய பிதா, பாவத்தைச் சுமந்து நின்ற குமாரனை விட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். நம்முடைய பாவத்திற்காகத் தேவன் காட்ட வேண்டிய முழுமையான கோபாக்கினையை இயேசு அங்கே அனுபவித்தார். பிதாவோடு அவர் நித்திய காலமாய் அனுபவித்த அந்த உறவு, நமக்காக அங்கே துண்டிக்கப்பட்டது. இதனாலேயே அவர், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று மிகுந்த வேதனையோடு கதறினார் ().

இயேசு சிலுவையில் தொங்கும்போது, ஜனங்களும் அதிகாரிகளும் அவர் தேவனால் கைவிடப்பட்டவர் என்பதைக் கேலி செய்தார்கள். “தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.” (). ஆனால் “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.” ().

இயேசு மரணமடைந்த அந்த நொடியில், எருசலேம் ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது (). இது ஒரு மகத்துவமான அடையாளம்: பாவத்தினால் பரிசுத்த தேவனுக்கும் பாவிகளுக்கும் இடையே இருந்த அந்தத் தடை இப்போது நிர்மூலமாக்கப்பட்டது. நாம் அனுபவிக்க வேண்டிய மரண ஆக்கினையை பாவமற்ற இரட்சகர் நமக்காகச் சுமந்ததால், தேவனுடைய நீதி முழுமையாகத் திருப்தி செய்யப்பட்டது ().

இப்போது, இயேசுவின் அந்தப் பரிசுத்த இரத்தத்தினால் தேவனோடு இருந்த பகை நீக்கப்பட்டு, புதிய உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் இனி தேவனை ஒரு தூரத்திலிருக்கும் நியாயாதிபதியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை; கிறிஸ்துவின் நீதியை ஆடையாக உடுத்திக்கொண்டு, மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசித்து, தேவனை "அப்பா பிதாவே" என்று அழைக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம் ().

பாவத்தின் கொடூரத்தையும், தேவனுடைய அளவிட முடியாத கிருபையையும் சிலுவை நமக்கு ஒரே நேரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது. நம்முடைய மன்னிப்பைச் சம்பாதிக்க நம்மிடம் எவ்விதத் தகுதியும் இல்லை; மாறாக, இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினால் கைவிடப்படுவதையும், மரணத்தையும் ஏற்றுக்கொண்டு, தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை மீட்டெடுத்தார். நாம் அவரை விசுவாசத்தினால் பற்றிக்கொள்ளும்போது, நம்முடைய பாவ அழுக்குகள் நீக்கப்பட்டு, அவருடைய பூரண நீதி நமக்கு ஒரு ஆடையாக உடுத்தப்படுகிறது. இப்போது தேவன் நம்மைப் பார்க்கும்போது, நம்முடைய தோல்விகளைப் பார்க்காமல், சிலுவையில் நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்கிய கிறிஸ்துவின் வெற்றியையே காண்கிறார். இந்த "மகத்துவமான பரிமாற்றத்தினால்" நாம் இப்போது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளைகளாய், தேவனுடைய சமூகத்தில் எவ்வித அச்சமுமின்றி நிற்கிறோம்.

7. உயிர்த்தெழுதல்: மரணத்தின் மீதான வெற்றியும் புதிய ஜீவனும்

இயேசு சிலுவையில் மரித்தபோது நமது பாவத்திற்கான தண்டனை முழுமையாகச் செலுத்தப்பட்டது உண்மைதான். ஆனால், அவர் கல்லறையிலேயே தங்கியிருந்தால் நமக்கு பாவத்தின் மீதோ அல்லது மரணத்தின் மீதோ எவ்வித வெற்றியும் இருந்திருக்காது. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறபடி, "கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருப்பீர்கள்" (). எனவே, நமது இரட்சிப்பு முழுமையடைய உயிர்த்தெழுதல் மிக மிக அவசியமானது.

பாவத்தின் சம்பளம் மரணம்; அந்த மரணத்தைச் சிலுவையில் ஏற்ற கிறிஸ்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததன் மூலம் மரணத்தையும் அதன் காரணமான பாவத்தின் சாபத்தையும் அடியோடு முறியடித்தார். நாம் ஒருகாலத்தில் பாவத்திற்கு அடிமைகளாகவும், அதற்குப் பயந்தவர்களாகவும் இருந்தோம். ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, நம்மைச் சிறைபிடித்திருந்த அந்த அடிமைத்தனத்தின் விலங்குகளை அவர் உடைத்தெறிந்தார். நாம் அவரோடு விசுவாசத்தில் இணைந்திருப்பதால், பழைய பாவ சுபாவத்திற்கு நாம் மரித்தவர்களாகவும், கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வு பெற்றவர்களாகவும் எழுப்பப்பட்டிருக்கிறோம் ().

உயிர்த்தெழுதல் என்பது இயேசு நமக்காகப் பெற்றுத்தந்த மாபெரும் விடுதலைப் பிரகடனம். அவர் மரணத்தை வென்று பிழைத்திருப்பதால்தான், நாமும் ஆவிக்குரிய மரணத்திலிருந்து பிழைத்து, தேவனுக்காக வாழும் வல்லமையைப் பெறுகிறோம். "ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (). அவர் உயிர்த்தெழுந்ததால் மட்டுமே நமக்கு நித்திய வாழ்வின் நம்பிக்கை உண்டு. இப்போது நாம் பாவத்திற்கு அடிமைகள் அல்ல, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக்கொண்ட அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.

கிறிஸ்துவின் இந்த உயிர்த்தெழுதல் நமக்கு ஒரு சாதாரண மாற்றத்தை அல்ல, ஆவிக்குரிய ரீதியில் ஒரு "புதிய சிருஷ்டியாக" மாறும் உன்னத வாழ்வை அளித்துள்ளது (). நாம் ஒருகாலத்தில் ஆவிக்குரிய ரீதியில் மரித்தவர்களாகவும், நம்முடைய பாவ இச்சைகளுக்கு அடிமைகளாகவும் இருந்தோம்; ஆனால் தேவன் நம்மை கிறிஸ்துவுடன்கூட உயிர்ப்பித்து, நமக்குப் புதிய ஜீவனை அளித்துள்ளார் (). இந்தப் புதிய வாழ்வு என்பது நமது சொந்த முயற்சியால் உருவானதல்ல, இது நமக்குள் வாழும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையாகும். பழைய பாவ மனுஷன் சிலுவையில் மரிக்க, இப்போது கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருப்பதால் நாம் பாவத்தின் மீது அதிகாரம் பெற்று, தேவனுக்குப் பிரியமான நீதிமான்களாக வாழ முடிகிறது. "இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" () என்ற நிச்சயத்துடன், மரணத்தின் பயமில்லாமல் நித்திய வாழ்வின் நம்பிக்கையோடு நாம் இப்போது ஒவ்வொரு நாளும் முன்செல்கிறோம்.

உயிர்த்தெழுதல் நமக்கு ஒரு புதிய அடையாளத்தைத் தருகிறது. நாம் இனி பாவத்தால் ஆளப்படுகிறவர்கள் அல்ல, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையால் ஆளப்படுகிறவர்கள். மரணம் அதன் கூர்மையை இழந்தது, பாவம் அதன் அதிகாரத்தை இழந்தது. கிறிஸ்து நமக்காக உயிர்த்தெழுந்ததால், நாமும் ஒவ்வொரு நாளும் பாவத்திற்கு மரித்து, நீதிக்கென்று பிழைத்திருக்கும் புதிய வாழ்வின் விடுதலையை அனுபவிக்கிறோம்.

8. புத்திரசுவிகாரம்: தேவனுடைய பிள்ளைகள் என்ற புதிய அடையாளம்

கிறிஸ்து நிறைவேற்றி முடித்த கிரியையினால், அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு முற்றிலும் புதிய அடையாளம் வழங்கப்படுகிறது. நாம் இனி தண்டனைக்குரிய பாவிகளோ அல்லது பயத்திற்கு அடிமைகளோ அல்ல; நாம் இப்போது மகா உன்னதமான தேவனுடைய பிள்ளைகள். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" (). இந்த அடையாளம் நமது கிரியைகளால் வந்ததல்ல, கிறிஸ்துவின் கிருபையினால் நமக்குக் கொடுக்கப்பட்ட சிலாக்கியமாகும்.

விசுவாசிகளாகிய நாம் முதலில் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். தேவன் இனி நம்மை நமது பாவங்களோடு பார்க்காமல், கிறிஸ்துவின் நீதியை ஆடையாக உடுத்தியவர்களாகப் பார்க்கிறார். எனவே, கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு என்பது இனி இல்லை (). தேவன் நம்மை மன்னித்தது மட்டுமல்லாமல், நம்மைத் தமது குடும்பத்தில் தத்தெடுத்து கொண்டுள்ளார். இதனால் நாம் தேவனை "அப்பா பிதாவே" என்று அழைக்கும் முழு உரிமையைப் பெற்று, அவருடைய சுதந்தரவாதிகளாகவும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரவாதிகளாகவும் மாறியிருக்கிறோம் ().

விசுவாசிகளின் இந்த புதிய வாழ்வு வெறும் பூமியோடு முடிந்துவிடுவதில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுவது போல, "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மை அவரோடுகூட எழுப்பி, உன்னதங்களில் அவரோடுகூட உட்காரவும் செய்தார்" (). நாம் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், ஆவிக்குரிய ரீதியில் நம்முடைய குடியிருப்பு இப்போது பரலோகத்தில்தான் இருக்கிறது (). நாம் இந்த உலகத்தில் பரதேசிகளாகவும் அந்நியர்களாகவும் இருந்தாலும், பரலோகத்தின் ஆசீர்வாதங்களையும் உரிமைகளையும் இப்போதே பெற்றுள்ளோம்.

இந்த புதிய வாழ்வை வழிநடத்த தேவன் நமக்குத் தமது பரிசுத்த ஆவியானவரை அளித்துள்ளார். பழைய ஏற்பாட்டிலேயே தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் இதனைத் தெளிவாக வாக்குப்பண்ணியிருந்தார். "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்." என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக தேவன் முன்னறிவித்தார் (). அதேபோல், கடைசி நாட்களில் எல்லா மாம்சத்தின்மேலும் தமது ஆவியைப் பொழிந்தருளுவதாக யோவேல் தீர்க்கதரிசி மூலமாகவும் வாக்குரைத்தார் ().

இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் இருந்தபோது, தாம் பிதாவினிடத்திற்குச் சென்றபின்பு நமக்காக ஒரு "தேற்றரவாளரை" அனுப்பப்போவதாகத் திட்டவட்டமாகப் பலமுறை வாக்குக் கொடுத்தார். "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." () என்று இயேசு உறுதியளித்தார். அவர் உயிர்த்தெழுந்த பின்பு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்கும்படி சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் ().

பெந்தெகொஸ்தே நாளில் பொழியப்பட்ட அந்தப் பரிசுத்த ஆவியானவர், இப்போது கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் வாசம் செய்கிறார். அவர் நமது நற்கிரியைகளுக்காகக் கொடுக்கப்பட்ட வெகுமதி அல்ல, மாறாக நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதற்கான அச்சாரம் அல்லது முத்திரை ஆவார் (). ஆவியானவர் நமக்குச் சத்தியத்தை உணர்த்துகிற வழிகாட்டியாகவும், பலவீனங்களில் உதவுகிற தேற்றரவாளராகவும் இருந்து, இந்தப் பூமியில் நாம் பரலோகக் குடிமக்களாக வாழத் தேவையான தேவ பெலத்தை அளிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் நாம் உண்மையாகவே ஒரு "புதுச்சிருஷ்டி". பழைய அடையாளங்களும் தோல்விகளும் ஒழிந்துபோயின (). இப்போது நாம் ஆவிக்குரிய மனிதர்களாக, பரிசுத்த ஆவியானவரின் ஒளியில், நித்திய நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நாம் தேவனுடைய பிள்ளைகள் மற்றும் பரலோகக் குடிமக்கள் என்று அறிந்துகொள்வது நமது வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றுகிறது. நாம் ஒரு எஜமானுக்குப் பயந்து கீழ்ப்படியும் அடிமைகளைப் போலல்லாமல், ஒரு பிதாவை நேசிக்கும் பிள்ளைகளாக அன்பினால் அவருக்குக் கீழ்ப்படிகிறோம். இந்த உலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல; நமது இரட்சகர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள நித்திய வீட்டிற்கு நாம் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறோம். நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் நாம் தனியாக இல்லை என்பதையும், நமது அடையாளம் கிறிஸ்துவின் கிருபையில் பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும் ஒவ்வொரு நாளும் நமக்கு உறுதிப்படுத்துகிறார்.

9. கிறிஸ்தவ வாழ்க்கை: கிறிஸ்துவின் சாயலில் வளரும் ஆவிக்குரிய போராட்டம்

இரட்சிப்பு என்பது தேவனுக்கு முன்பாக ஒரு விசுவாசியின் நிலையை என்றென்றைக்குமாக மாற்றுகிறது. விசுவாசத்தின் மூலம் நாம் குற்றமற்றவர்கள் என்று தேவன் அளிக்கும் ஒருமுறை பிரகடனமாகிய நீதிமானாக்குதல் (Justification) மற்றும் நாம் வாழ்நாள் முழுவதும் ஆவியானவரின் துணைக்கொண்டு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறும் பரிசுத்தமாக்கப்படுதல் (Sanctification) ஆகிய இரு நிலைகளையும் இரட்சிப்பு உள்ளடக்கியுள்ளது. நீதிமானாக்கப்படுதல் பாவத்தின் தண்டனையிலிருந்து நமக்கு உடனடி விடுதலையைத் தருகிறது, பரிசுத்தமாக்கப்படுதல் பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மைப் படிப்படியாக விடுவிக்கிறது. இது வெறும் ஆசீர்வாதம் மட்டுமல்ல, கிறிஸ்துவின் பூரணத்துவத்தை நோக்கி ஓடும் ஒரு பயணமாகும். இதில் நாம் கிறிஸ்துவோடு கூட "சிலுவையைச் சுமக்கவும்", உலகத்தின் இச்சைகளைத் தியாகம் செய்து அவரோடு கூட பாடுபடவும் அழைக்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது உலகத்தின் போக்கிற்கு எதிராக நீந்துவதாகும். கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு, அவருடனே கூடப் பாடுபடவும் அழைக்கப்பட்டுள்ளோம் (). இந்தப் பாடுகள் என்பது எப்போதும் உடல்ரீதியான சித்திரவதை அல்ல; மாறாக, உலகத்தின் சிநேகிதனாக இருப்பதை விட தேவனுக்குப் பிரியமானவனாக இருக்கத் தெரிந்துகொள்வதாகும்.

பிறரை மன்னிப்பது, சுய விருப்பங்களைத் தியாகம் செய்வது, உலகத்தின் கேலிக்கும் அவமானத்திற்கும் ஆளாக நேரிட்டாலும் சத்தியத்தில் உறுதியாய் இருப்பது போன்றவையே நாம் சுமக்கும் சிலுவை. "ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது." (). ஒருவேளை இந்த உலகம் நம்மை வெறுத்தாலும் அல்லது நம்முடைய உயிருக்கே ஆபத்து வந்தாலும், நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல என்ற நிச்சயத்துடன் மகிழ்ச்சியோடு அதை எதிர்கொள்கிறோம். ஏனெனில், நாம் அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோம் ().

மனிதன் வீழ்ச்சியடைந்தபோது, நன்மையைச் செய்யும் முழுமையான திறனை இழந்தான். அவன் பாவத்திற்கு அடிமையாகி, தீமையைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியாத நிலையில் இருந்தான். ஆனால், கிறிஸ்து நமக்காக மரித்து உயிர்த்தெழுந்ததன் மூலம், அந்த அடிமைத்தனத்தின் நுகம் முறிக்கப்பட்டது. இப்போது நாம் நீதிமான்களாக்கப்பட்டிருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் துணையோடு "சரியானதைத் தெரிந்துகொள்ளும்" ஆற்றலை மீண்டும் பெற்றுள்ளோம்.

இருப்பினும், நாம் இன்னும் இந்த மாம்ச உடலில் வாழ்வதால், நன்மையைச் செய்வதற்கும் தீமையைச் செய்வதற்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் நமக்குள் நடக்கிறது. "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை." () என்று பவுல் கூறுவது இந்த போராட்டத்தையே. ஆனால், நாம் இப்போது உதவியற்றவர்கள் அல்ல; "பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்." ().

தேவன் நம்மை நற்கிரியைகளைச் செய்கிறதற்காகவே கிறிஸ்துவுக்குள் மீண்டும் சிருஷ்டித்திருக்கிறார் (). நமது சொந்தப் பலத்தால் நம்மால் வெற்றி பெற முடியாது, ஆனால் கிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்கும்போது அவர் மிகுந்த கனிகளைத் தருகிறார். நமது பலவீனமான நேரங்களில், தேவனே தமது தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நமக்குள் உண்டாக்குகிறார் ().

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவின் பூரணத்துவத்தை நோக்கிய ஒரு தீவிரமான ஓட்டம். நாம் இந்த மாம்சத்தில் இருக்கும் வரை அந்த முழுமையை எட்டாதவர்களாகத் தோன்றினாலும், நம்முடைய ஒவ்வொரு நாளின் இலக்கும் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக ஒரு பூரண புருஷனாகும்படிக்கு நாம் வளருவதே ஆகும் ().

எனவே, நாம் பாவத்துடன் போராடும்போது, அதை ஒரு சாதாரண பலவீனமாகக் கருதி சமாதானமடையாமல், அதிலிருந்து முழுமையான விடுதலை பெற்று கிறிஸ்துவைப் போலப் பூரணமாக மாறப் போராடுகிறோம். கிறிஸ்துவோடு பாடுபடுவதையும், உலகத்தைத் துறப்பதையும் ஒரு பாரமாக எண்ணாமல், அது நம்மைப் பூரணத்துவத்திற்கு வழிநடத்தும் ஒரு சிலாக்கியமாக எண்ணி மகிழ்வோம். வளர்ச்சி மெதுவாக இருக்கலாம், ஆனால் நம்முடைய பார்வை எப்போதும் பூரணராகிய இயேசுவின் மேலேயே இருக்கட்டும். "பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." () என்ற பவுலின் வைராக்கியத்தோடு, ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் சாயலில் இன்னும் முழுமையடைய முன்னேறுவோம்.

10. ஊழியம்: சுவிசேஷத்தின் அறிவிப்பும் நித்திய நம்பிக்கையும்

ஆதியிலே, தேவன் மனிதகுலத்தைத் தமது மகிமைக்காகவும் தம்மோடு ஐக்கியம் கொள்வதற்காகவும் படைத்தார். வீழ்ச்சியின் மூலம், பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன; இதனால் மனிதகுலம் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளும் திறனை இழந்தது. தமது இரக்கத்தினால், தேவன் ஒரு இரட்சகரை வாக்குறுதி அளித்தார், காலம் நிறைவேறினபோது அந்த இரட்சகர் வந்தார். அவருடைய பூரண வாழ்க்கை, பலி மரணம் மற்றும் வெற்றிகரமான உயிர்த்தெழுதலின் மூலம், விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சிப்பு முழுமையாக நிறைவேற்றப்பட்டது.

இரட்சிப்பு என்பது நாம் பெற்றுக்கொண்ட ஒரு விலைமதிப்பற்ற பரிசு; ஆனால் அது நம்மோடு முடிந்துவிடுவதில்லை. ஒரு புதிய அடையாளத்தையும், புதிய வாழ்வையும் பெற்றுக்கொண்ட விசுவாசிகளாகிய நாம், இப்போது இந்த உலகத்தில் தேவனுடைய "ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், அவருக்குச் சொந்தமான ஜனமாகவும்" இருக்கிறோம் (). இரட்சிப்பு என்பது முற்றிலும் தேவனுடைய கிரியையாக இருந்தாலும், இருளில் இருக்கிற மக்களைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி, தேவன் நம்மையே கருவியாகப் பயன்படுத்துகிறார்.

இயேசு கிறிஸ்துவே இரட்சிப்பிற்குரிய ஒரே வழி. அவரைத் தவிர வானத்தின் கீழெங்கும் மனிதர்கள் இரட்சிக்கப்படும்படி வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை (). கிறிஸ்துவை அறியாத ஒருவருக்கு நித்தியமான ஒரு நம்பிக்கை இல்லை. ஆனால், விசுவாசிகள் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? அப்போஸ்தலனாகிய பவுல் இந்தத் தர்க்கரீதியான சங்கிலித் தொடரை மிகத் தெளிவாக விளக்குகிறார்:

"அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?" ().

விசுவாசிப்பதற்குக் கேள்விப்பட வேண்டும், கேள்விப்படுவதற்கு யாராவது சொல்ல வேண்டும். இதுவே நமது பணி. இயேசு கட்டளையிட்டபடி: "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்." (). இது ஒரு தெரிவு அல்ல, இது ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை.

நாம் சுவிசேஷத்தைச் சொல்லும்போது, அது மக்களின் அறிவுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய நித்திய வாழ்வுக்கே வாசலைத் திறக்கிறது. நாம் கிறிஸ்துவின் பாடுகளில் பங்குபெற்று, உலகத்தின் போக்கிற்கு எதிராக வாழும்போது, நமது வாழ்க்கையே ஒரு சாட்சியாக மாறுகிறது. ஆனால் அதோடு நின்றுவிடாமல், நமது வார்த்தைகளாலும் "இயேசுவே இரட்சகர்" என்பதை அறிவிக்க வேண்டும். ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவது என்பது தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியம்.

இந்தப் பணி ஒரு நித்திய கண்ணோட்டத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் மரணத்தையும் நியாயத்தீர்ப்பையும் எதிர்கொள்வார்கள் என்று வேதாகமம் நமக்கு நினைவூட்டுகிறது (). கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுக்கு, தேவனிடமிருந்து நித்திய பிரிவினை உண்டு. ஆனால் அவரை நம்புகிறவர்களுக்கு, நித்திய ஜீவன் உண்டு. அதில் முழுமையான மீட்பு, பூரண மகிழ்ச்சி மற்றும் தேவனோடு முறிக்கப்படாத ஐக்கியம் ஆகியவை அடங்கும். ஒரு நாள், தேவன் எல்லாவற்றையும் புதியதாக்குவார், அவருடைய மக்கள் பாவம், துன்பம் மற்றும் மரணம் இல்லாமல் என்றென்றும் அவரோடு வாசம் செய்வார்கள் ().

இந்த நித்திய நம்பிக்கை விசுவாசிகளைத் தற்காலத்தில் விசுவாசத்தோடு வாழ பலப்படுத்துகிறது. தேவன் நமக்காக என்ன செய்தார், அவர் நம் மூலமாக என்ன செய்து கொண்டிருக்கிறார், எதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை அறிந்து, நாம் தைரியமாக நற்செய்தியைப் பிரகடனம் செய்கிறோம், மேலும் அதன் விளைவுகளைத் தேவனிடம் பொறுமையாக ஒப்படைக்கிறோம். கிறிஸ்து மீண்டும் வரும் வரை இந்தப் பணி தொடர்கிறது, மேலும் நித்திய ஜீவனின் நம்பிக்கை அந்த நாள் வரை நம்மைத் தாங்குகிறது.

சுவிசேஷம் அறிவிப்பது என்பது ஒரு பிச்சைக்காரன், தனக்கு உணவு கிடைத்த இடத்தைச் சக பிச்சைக்காரர்களுக்குச் சொல்வதைப் போன்றது. நாம் தகுதியற்றவர்களாய் இருந்தும் கிருபையினால் இரட்சிக்கப்பட்டோம். அதே கிருபை மற்றவர்களுக்கும் தேவை என்பதை நாம் மறக்கக் கூடாது. மக்கள் கேள்விப்படாமல் விசுவாசிக்க முடியாது; விசுவாசிக்காமல் இரட்சிக்கப்பட முடியாது. எனவே, கிறிஸ்துவின் அன்பினால் உந்தப்பட்டு, "இதோ, நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்" என்ற அர்ப்பணிப்போடு இந்த உலகிற்குச் சுவிசேஷத்தைக் கொண்டு செல்வோம்.

Comments

Share your thoughts below.

Loading comments...