கட்டுரை

ஏன் சிலுவை மரணம் அவசியம்?

Josiah Prathaban·19 மே 2026

ஏன் சிலுவை மரணம் அவசியம்?

கிறிஸ்தவர்களாகிய நமக்கு "இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்" என்பது மிக நன்றாகத் தெரிந்த ஒரு உண்மை. அவர் நமக்காக மரித்தார், நம் பாவங்களுக்காகத் தன்னுயிரைத் தந்தார் என்று நாம் அடிக்கடி கூறுகிறோம். நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா, இயேசுவின் சிலுவை மரணம் ஏன் அவ்வளவு அவசியமானது என்று? சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த உலகத்தைப் படைத்து, என்றென்றைக்கும் ஆளுகை செய்கிறவர். "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" (). அவரால் இயலாத காரியம் ஒன்றுமில்லை (). அவருடைய சித்தத்திற்கும் திட்டத்திற்கும் மேலாக இங்கு ஒன்றும் இல்லை; அவரை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது.

அப்படியிருக்க, அவர் பாவிகளை நேசித்து அவர்களை மீட்க விரும்பியபோது, சாதாரணமாக ஒரு வார்த்தை சொல்லி எல்லாவற்றையும் மன்னித்திருக்கலாமே? "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்று ஒரு கட்டளை பிறப்பித்திருந்தால் எல்லாம் முடிந்திருக்குமே! பின் ஏன் பல ஆண்டுகளாக ஒரு மீட்பரை வாக்குத்தத்தம் பண்ணி (), அவர் வந்து பாடுபட்டு, இரத்தஞ்சிந்தி, மரித்து, பலியாகி, இறுதியில் "முடிந்தது" () என்று சொல்ல வேண்டும்?

நமது பாவங்களை மன்னிக்க தேவன் வேறு வழிகளைக் கையாண்டிருக்க முடியாதா? வெறும் ஒரு வார்த்தையினால் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது" என்று சொல்லியிருக்கலாமே? அல்லது தண்டனையே இல்லாமல் நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கலாமே? ஏன் தன் ஒரே பேறான குமாரனை இவ்வளவு கொடூரமான மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்? இது வெறும் ஒரு "கடவுளின் திட்டம்" என்று மட்டும் சொல்லி கடந்து போகக்கூடிய விஷயம் அல்ல.

இதற்கான பதிலைத் தேடும்போது, நாம் ஆராதிக்கும் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை முதலில் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம்முடைய தேவன் எதையுமே தற்செயலாகவோ அல்லது காரணமின்றியோ செய்பவர் அல்ல; அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தெய்வீக நோக்கமும், அர்த்தமும் உண்டு. தேவனுடைய திட்டங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், அந்தத் திட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் அவருடைய குணாதிசயங்களை (Attributes) நாம் ஆராய வேண்டும். அவர் யார்? அவருடைய உள்ளம் எதைக் கோருகிறது? என்பதைப் பொறுத்தே அவருடைய செயல்பாடுகள் அமைகின்றன.

சுவிசேஷத்தின் ஆழத்தை அறிய, வேதம் வெளிப்படுத்தும் தேவனுடைய மாறாத நான்கு சுபாவங்களின் வழியாய் இந்தச் சிலுவையின் அவசியத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

1. ஏன் ஒரு வார்த்தையில் மன்னிக்க முடியாது?

தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்றாலும், ஒரு வார்த்தையில் மனிதனை அப்படியே மன்னித்துவிட முடியாது. ஏன்? அதற்கு தேவனுடைய இரண்டு முக்கிய சுபாவங்கள் தடையாக இருக்கின்றன.

  • தேவன் சத்தியமானவர்: தேவனுடைய முதல் சுபாவம் அவர் "சத்தியம்" உள்ளவர். "தேவன் பொய் சொல்ல அவர் ஒரு மனிதன் அல்ல" (). அவர் ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால் அது மாறாது. மனிதன் படைக்கப்பட்ட போதே, "நீ இதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" () என்றும், "பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" () என்றும் தேவன் தன் மாறாத சத்திய சட்டத்தை அறிவித்துவிட்டார். இப்போது மனிதன் பாவம் செய்துவிட்டான். தேவன் ஒரு வார்த்தையில் சும்மா மன்னித்துவிட்டால், அவர் சொன்ன சத்திய வார்த்தை பொய்யாகிவிடும். தன் அன்பிற்காகத் தன் சத்தியத்தை மீறினால், அவர் சத்தியபரராக இருக்க முடியாது. எனவே, பாவம் செய்த மனிதன் செத்தே தீர வேண்டும் என்ற சத்தியம் நிறைவேற வேண்டியிருந்தது.
  • தேவன் நீதியுள்ளவர்: தேவனுடைய மற்றொரு சுபாவம் அவர் நீதியின் இருப்பிடமாய் இருக்கிறார். "கர்த்தர் நீதியுள்ளவர், அவர் நீதியின்மேல் பிரியப்படுவார்" (). ஒரு நாட்டின் நீதிபதி, தன் சொந்த மகன் குற்றம் செய்துவிட்டு நீதிமன்றத்தில் நிற்கும்போது, பாசத்திற்காக அவனைத் தண்டிக்காமல் சும்மா விடுவித்தால் அவர் நல்ல நீதிபதியாக இருக்க முடியாது. அது அநீதி. வேதம் சொல்கிறது: "துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கிறவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்" (). எனவே, தேவன் மனிதனை நேசிக்கிறார் என்பதற்காக அவனுடைய பாவத்தைத் தண்டிக்காமல் அப்படியே விட முடியாது. நீதியின்படி பாவத்திற்கான தகுந்த தண்டனை கொடுக்கப்பட்டே தீர வேண்டும்.

2. ஏன் மனிதனை அப்படியே அழித்துவிட முடியாது?

சத்தியமும் நீதியும் பாவியான மனிதனைத் தண்டிக்கக் கோரும் அதே நேரத்தில், தேவனுடைய இருதயத்தில் இருக்கும் இன்னும் இரண்டு சுபாவங்கள் மனிதனுக்காக ஏங்குகின்றன.

  • தேவன் கிருபை நிறைந்தவர்: தேவனுடைய உள்ளம் அன்பினாலும் கிருபையினாலும் நிறைந்தது. "கர்த்தர் கிருபையும் இரக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்" (). கிருபை என்பது தகுதியற்ற நமக்குக் காட்டப்படும் தகுதியற்ற அன்பு. மனிதன் பாவம் செய்து அழிவின் விளிம்பில் நின்றபோது, அவனுடைய ஆத்துமாவை அப்படியே நரக ஆக்கினைக்கு ஒப்புக்கொடுக்க தேவனுடைய கிருபைக்கு மனமில்லை. அவனுக்கு ஒரு மீட்பையும், மன்னிப்பையும் தர கிருபை விரும்பியது.
  • தேவன் சமாதானம் பண்ணுகிறவர்: தேவன் குழப்பத்திற்கல்ல, சமாதானத்திற்கே தேவனாயிருக்கிறார் (1கொ 14:33). பாவம் மனிதனைத் தேவனிடமிருந்து பிரித்து, அவரோடு ஒரு பகைமையை உண்டாக்கியது. ஆனால் தேவனுடைய நோக்கம் மனிதனைத் தன்னோடு ஒப்புரவாக்கி, அவனுக்குத் தன்னோடு ஒரு நித்திய சமாதானத்தைத் தருவதே ஆகும்.

3. தார்மீக முரண்பாடு

இப்போது தேவனுடைய இந்த நான்கு சுபாவங்களையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால், மனித அறிவுக்கு எட்டாத ஒரு பெரிய தார்மீகச் சிக்கல் அங்கே உருவாவதைக் காணலாம்:

  • சத்தியமும் நீதியும் ஒருபுறம் நின்று: "மனிதன் பாவம் செய்தான், அவன் தண்டிக்கப்பட வேண்டும், அவன் செத்தே தீர வேண்டும்" என்று சட்டப்படியாகக் கோருகின்றன.
  • கிருபையும் சமாதானமும் மறுபுறம் நின்று: "மனிதனைத் தண்டிக்காதீர், அவனை மன்னித்து எங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று அன்போடு கெஞ்சுகின்றன.

தேவன் நீதியை நிலைநாட்டி மனிதனைத் தண்டித்தால், மனிதன் அழிந்துபோவான்; அங்கே கிருபையும் சமாதானமும் தோற்றுப்போகும். தேவன் கிருபை கூர்ந்து மனிதனைச் சும்மா மன்னித்துவிட்டால், பாவம் தண்டிக்கப்படாமல் போகும்; அங்கே சத்தியமும் நீதியும் தோற்றுப்போகும். தேவனுடைய சுபாவங்களில் ஒன்று வென்று மற்றொன்று தோற்க முடியாது. அவை அனைத்தும் ஒரே நேரத்தில் முழுமையாக நிறைவேற வேண்டும்.

மனிதனைப் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனுக்கேற்பட்ட இந்த உன்னதச் சிக்கலுக்கு, மனிதனோ அல்லது தூதர்களோ எந்தத் தீர்வும் சொல்ல முடியாது. இதற்குத் தேவனே கண்டடைந்த ஒரே தீர்வுதான் சிலுவை.

4. சிலுவை: முரண்பாடுகள் தீர்க்கப்பட்ட இடம்

இந்த மாபெரும் தார்மீகச் சிக்கலை தேவன் சிலுவையில் எப்படித் தீர்த்தார்?

தேவன் மனிதனை அப்படியே மன்னிக்கவில்லை; மாறாக, மனிதன் செய்ய வேண்டிய மரணப் பலியைத் தன் சொந்தக் குமாரனாகிய இயேசுவின் மேல் சுமத்தினார். சிலுவையில் இயேசு கிறிஸ்து தொங்கியபோது தேவனுடைய நான்கு சுபாவங்களும் எவ்வாறு ஒரே இடத்தில் நிறைவேறின என்று பாருங்கள்:

  • சத்தியம் நிறைவேறியது: "பாவத்தின் சம்பளம் மரணம்" என்ற தேவனுடைய வார்த்தை மாறவில்லை. மனிதனுக்குப் பதிலாக இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் தேவனுடைய சத்தியம் காக்கப்பட்டது.
  • நீதி திருப்தியடைந்தது: பாவம் சும்மா விடப்படவில்லை. மனிதன் மேல் ஊற்றப்பட வேண்டிய தேவனுடைய முழு கோபாக்கினையும், தண்டனையும் சிலுவையில் இயேசுவின் மேல் ஊற்றப்பட்டது. நீதிக்குத் தேவையான முழுப் பரிகாரமும் அங்கே செலுத்தப்பட்டது.
  • கிருபை வெளிப்பட்டது: நாம் தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில், இயேசு நமக்காகத் தன் ஜீவனைத் தந்ததன் மூலம் தேவனுடைய எல்லையற்ற கிருபை நமக்குத் தகுதியற்ற மன்னிப்பாகக் கிடைத்தது.
  • சமாதானம் நிலைநாட்டப்பட்டது: பாவத்திற்கான தண்டனை இயேசுவின் மேல் தீர்க்கப்பட்டதால், நமக்கும் தேவனுக்கும் இருந்த பகைமை நீங்கி, சிலுவையின் இரத்தத்தினாலே நித்திய சமாதானம் உண்டானது.

முடிவுரை

ஏன் சிலுவை மரணம் அவசியம்? ஏனென்றால், தேவன் தன் நீதியையும் சத்தியத்தையும் சிறிதும் குறைத்துக்கொள்ளாமலேயே, மனிதனுக்குத் தன் கிருபையையும் சமாதானத்தையும் வழங்க விரும்பினார்.

சிலுவை என்பது தேவனுடைய நீதிக்கும் அன்புக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசம் அல்ல. மாறாக, தேவனுடைய நீதியும் அன்பும் ஒரே நேரத்தில் நூறு சதவீதம் முழுமையாக வெளிப்பட்ட உன்னத இடமாகும். இதனைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாகப் பாடினார்:

"கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்." ()

இயேசு சிலுவையில் தொங்கி, தன் ஜீவனைத் தந்து, "முடிந்தது" () என்று உரக்கச் சொன்ன அந்த நொடியில், இந்த நான்கு சுபாவங்களும் சிலுவையின் நிழலில் ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டன. மனிதனுடைய மீட்பும் அங்கேயே சாத்தியமானது!

Comments

Share your thoughts below.