மோட்சப்பயணம் (The Pilgrim's Progress) · முதலாம் பாகம்

குறுகிய வாசல் நோக்கிப் பயணம்

ஜான் பனியன்

அவன் குறுகிய வாசல் நோக்கி வேகமாக ஓடுவதை நான் என் கனவில் கண்டேன். அவன் சிறிது தூரம் செல்வதற்குள் அவன் மனைவியும், பிள்ளைகளும் அவன் பின்னே ஒடிவந்தார்கள்

"அப்பா போகாதீர்கள், போகாதீர்கள். திரும்ப வாருங்கள்" என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அவனோ தனது காதுகளைப் பொத்திக்கொண்டு திரும்பிப் பாராமல் ஓடினான்.

"நித்திய ஜீவன், நித்திய ஜீவன்" என்று கத்தியபடி அவன் ஓடிகொண்டிருப்பதை நான் கண்டேன்.

அவன் இவ்வாறு ஓடுவதைக் கண்ட ஊரார் கூடி வந்தார்கள். சிலர் இவன் பைத்தியம் பிடித்துள்ளான் என்று ஏசினர்; சிலர் அவனைக் கேலி செய்தனர் அவர்களில் இருவர் | மட்டும் அவனை எப்படியாவது திரும்பக் கூட்டிக் கொண்டு வருவோம் என்று சபதம் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் பெயர் பிடிவாதக்காரன், மற்றவன் பெயர் விட்டுக்கொடுப்பவன்.

அவனை எப்படியாவது திரும்பச்செய்வோம் என்று சபதமிட்டிருந்த இருவரும் வெகுவேகமாக ஓடி அவனை வழிமறித்தார்கள்.

"ஏனப்பா இப்படி ஓடிவந்து வழிமறிக்கிறீர்கள்?'' என்று அவன் அவர்களிடம் கேட்டான். "உன்னைத் திரும்ப ஊருக்குக் கூட்டிச் செல்லத்தான் வந்தோம் வா எங்களோடு" என்று அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். அது மட்டும் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டான் கிறிஸ்தியான் என்ற பெயரையுடைய அவன்.

"அண்ணா பிடிவாதக்காரனே, தம்பி விட்டுக் கொடுப்பவனே, நீங்கள் அழியும் நகரத்தில் வசிக்கிறீர்கள். அது நான் பிறந்து வளர்ந்த இடமாக இருந்தாலும்கூட நான் பிறந்து அங்கிருந்தபடியே மரித்தால் பூமியிலும் ஆழமான நரக பாதாளத்திலும் எரியும் அக்கினிக்குள்ளும், கந்தகத்திலும்தான் அழிந்துபோகவேண்டும். ஆகையால் என் நண்பர்களே, நீங்களும் இந்த அழியும் நகரத்தைவிட்டு என்னுடனே வந்து குறுகிய வாசலை அடைந்து தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று ஆலோசனை கூறினான் கிறிஸ்தியான்.

"நீ என்ன சொல்கிறாய்? - குடும்பத்தினரையும், உறவினர்களையும் மற்றும் எல்லா வசதிகளையும் இன்பங்களையும் விட்டுவிட்டா வரச்சொல்லுகிறாய்?” என்று கோபத்துடன் கேட்டான் பிடிவாதக்காரன்.

“ஆம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் வரவேண்டும். ஏனென்றால் நாம் பெறப்போகும் நித்திய பாக்கியத்திற்கு இது எள்ளளவுகூட இணையாகாது. நீங்கள் திரும்பச் செல்லாமல் என் கூடவே வந்தால் இந்தப் பாக்கியம் அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பேரின்ப ஈவு நமக்கு மட்டுமன்றி இனிமேல் வரப்போகிறவர்களுக்கும்கூட போதுமானவையே. நீங்களும் என்னோடு வந்து இது உண்மையா, பொய்யா என்று கண்டுகொள்ளலாமே!" என்றான் கிறிஸ்தியான்.

“ஏதோ பாக்கியங்கள் என்று சொல்லி இந்தப் பூலோக இன்பங்களை ஒதுக்கிவிடுகிறாயே! அப்படி என்ன உயர்ந்த பாக்கியங்கள் அவை?" என்று கிண்டலாகக் கேட்டான் பிடிவாதக்காரன்.

“என்றுமே அழியாததும், குறைவற்றதும், நித்தியமானதுமான விடுதலையே நான்கூறும் அந்தப் பாக்கியம். அதை வாஞ்சையாகத் தேடுபவர்களுக்காக, அது மோட்சத்தில் வைக்கப்பட்டுள்ளது. நித்திய விடுதலை, நித்திய பேரின்பம் ! அதைப்பற்றிய விவரங்களெல்லாம் இதோ இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால் படித்துப் பார்க்கலாம்." என்றான் கிறிஸ்தியான்.

"நீயும் உன்புத்தகமும்! உன் புத்தகத்தை அதோ அந்தப் புதரில் வீசியெறிந்துவிட்டு, வீண்பேச்சுப் பேசாமல் எங்களோடு திரும்ப ஊருக்குப் வரப்போகிறாயா, இல்லையா?" என்று கண்டிப்போடு கேட்டான் பிடிவாதக்காரன்.

"என்ன, திரும்பிச்செல்வதா? அது மட்டும் முடியாது. நான் கலப்பையைப்பிடித்துவிட்டேன். இனி நீங்கள் அடித்தாலும், உதைத்தாலும் பின்னிட்டுப்பார்க்கமாட்டேன்," என்று உறுதியாக மறுத்துவிட்டான் கிறிஸ்தியான்.

“தம்பி விட்டுக்கொடுப்பவனே, திரும்பிப் போகலாம் வா! இவன் ஒரு பைத்தியக்காரக் கூட்டத்தில் சேர்ந்து விட்டான். இனி மெத்தப் படித்தவன் நியாயமாக எடுத்துக் கூறினாலும் இவர்கள் பிடித்த பிடியை விடமாட்டார்கள். இவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நீ வா, நாம் வீட்டுக்குத் திரும்புவோம்" என்றான் பிடிவாதக்காரன்.

"மாமா. அப்படியெல்லாம் திட்டாதீர்கள். இந்த கிறிஸ்தியான் சொல்வது உண்மையாக இருக்குமோ? அவன் தேடிப்போகும் நித்திய வாழ்வு நாம் பூமியில் அனுபவிப்பதைவிட மேலானதாக இருக்குமோ? அவன் கூடப் போகலாமா என்று நினைக்கிறேன்" என்றான் விட்டுக்கொடுப்பவன்.

“என்ன தம்பி, என்ன சொன்னாய்? உனக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதா? என் பேச்சைக் கேட்டு ஒழுங்காக ஊருக்குத்திரும்பு, புத்தியில்லாதவன்போல இவன் கூடப்போகிறேன் என்று சொல்கிறாயே? இவனை எப்படி நம்பமுடியும்? பாழுங்கிணற்றிலும் படுகுழியிலும் தள்ளிவிடமாட்டான் என்று என்ன நிச்சயம்? நீ பேசாமல் என்னுடன் திரும்பி வந்துவிடு” என்று அதட்டினான் பிடிவாதக்காரன்.

உடனே கிறிஸ்தியான், “தம்பி விட்டுக்கொடுப்பவனே, நீ என்னுடன் வருவதற்குப் பயப்படவேண்டாம். நான் போகும் இடத்தில் இன்னும் அநேகப் பாக்கியங்கள் நமக்குக் கிடைக்கும். அவற்றில் சிலவற்றைத்தான் இப்போது நான் கூறியுள்ளேன். மற்றவைகளைப்பற்றி நீ இந்தப் புத்தகத்தில் வாசித்துப்பார்க்கலாம். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அவைகளை உண்டாக்கியவருடைய திரு இரத்தத்தால் அவை முத்திரை போடப்பட்டுள்ளன” என்று விளக்கினான்.

விட்டுக்கொடுப்பவன் திருப்தியடைந்தவனாக பிடிவாதக்காரனைப் பார்த்து, "மாமா, இதோ நான் இந்த நல்ல மனிதருடன் செல்வதாக முடிவெடுத்துவிட்டேன். என்ன நடந்தாலும் நடக்கட்டும் இதுவே எனது இறுதியான முடிவு" என்று சொல்லிவிட்டு கிறிஸ்தியானிடம் :

“என் அருமை நண்பரே, நீர் கூறும் இடத்துக்குச்செல்லும் வழி உமக்குத் தெரியுமா?" என்று கேட்டான். "நானும் வழி தெரியாமல்தான் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருநாள் நற்செய்தியாளர் என்னும் ஒரு நல்லவரைச் சந்திக்க நேர்ந்தது. இதே வழியில் தொடர்ந்து நடந்தால் ஒரு குறுகிய வாசல் வரும் என்றும் அங்கே விசாரித்தால் அடுத்து எப்படிச் செல்வது என்று தெரியும் என்றும் அவர்தான் கூறினார். வா, நாமிருவரும் போய் அந்தக் குறுகிய வாசலண்டை விசாரிப்போம்" என்றான் கிறிஸ்தியான்.

“அதுவும் சரிதான் வாரும், வேகமாகப் போகலாம்" என்று கூறிய விட்டுக்கொடுப்பவன் கிறிஸ்தியானோடு சேர்ந்து துரிதமாக நடக்கத் துவங்கினான்.

"நீங்கள் தாராளமாகப் போகலாம். நான் ஒன்றும் உங்களைப்போல முட்டாள் இல்லை. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம்" என்று கூறிய பிடிவாதக்காரன் தனது ஊரை நோக்கித் திரும்பி நடந்தான்.