மோட்சப்பயணம் (The Pilgrim's Progress) · முதலாம் பாகம்

நற்செய்தியாளரோடு முதலாம் சந்திப்பு

ஜான் பனியன்

ஒருநாள் அவன் எப்போதும்போலவே வயல்வெளியில் உலாவிக்கொண்டிருந்தான். அந்தப் புத்தகத்தை வாசித்து அழுதுகொண்டிருப்பதை நான் கண்டேன். இறுதியில் துயரமிகுதியால் வாய்விட்டுக் கதறி. "ஐயோ, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும்?" என்று கத்தினான் (). எந்தத் திசையில் செல்வது என்று புரியாதவனைப்போல அங்குமிங்கும் பார்த்தபடி அசையாமல் நின்றுகொண்டிருந்தான்.

அப்போது நற்செய்தியாளர் என்னும் பெயருடைய ஒருவர் அவ்வழியே வந்தார். அவனது நிலையைக் கண்டவுடன் அருகே சென்று “ஏனப்பா அழுதுகொண்டிருக்கிறாய்?" என்றுகேட்டார்.

"ஐயா, இதோ என் கையிலுள்ள இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையும், மரணத்திற்குப்பின்பு நான் நியாயந்தீர்க்கப்படுவேன் என்பதையும் அறிந்துகொண்டேன், மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. நியாயத்தீர்ப்பைச் சந்திக்கவும் எனக்குப் பயமாக இருக்கிறது” – என்று கூறிப் புலம்பினான் ().

“ஏனப்பா மரணத்தைக்கண்டு பயப்படுகிறாய்? இந்த உலகத்தில்தான் நாம் எத்தனையோ பாடுகளைச் சகிக்க வேண்டியதாயிருக்கிறதே!" என்றார் நற்செய்தியாளர்.

"அது உண்மைதான் ஐயா, ஆனால் இதோ எனது முதுகிலுள்ள சுமையைப் பாரும். நான் இறந்தாலும்கூட இந்தச் சுமை என்னைவிட்டுப் போகாது போலிருக்கிறதே. இது என்னை நரகம் வரை இழுத்துக்கொண்டுபோய் நித்திய நெருப்பில் தள்ளிவிடுமோ என்று பயப்படுகிறேன். இந்த உலகத்தின் சிறைச்சாலைத் துன்பங்களையே நம்மால் அனுபவிக்க முடியாதபோது நித்திய காலமாக நரக வேதனையை எவ்வாறு சகிக்கமுடியும்? இதை எண்ணித்தான் நான் புலம்புகிறேன்” என்றான் அவன்.

“பிறகு ஏன் இதற்காக ஒன்றும் செய்யாமல் இங்கே நிற்கிறாய்?" என்று கேட்டார் நற்செய்தியாளர். "என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் தானே ஐயா, இங்கே நின்று அழுதுகொண்டிருக்கிறேன்" என்றான் அவன்.

அப்போது நற்செய்தியாளர் ஒரு சுருளை அவனிடம் கொடுத்து "இதை வாசித்துப்பார்" என்றார். அதை வாங்கிய அவன் மெதுவாக விரித்துப்பார்த்தான். அதில் "வருங்கோபத்துக்கு பறந்தோடிப்போ" () என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைக்கண்டான்.

உடனே, "நான் எங்கே ஓடிப்போகவேண்டும் ஐயா?" என்று அவரிடம் கேட்டான்.

நற்செய்தியாளர் தனது கையை நீட்டி வெகு தொலைவில் சுட்டிக் காட்டினார். "அதோ வெகு தொலைவில் இருக்கிற குறுகியவாசல் உனக்குத்தெரிகிறதா? என்றுகேட்டார்.

"ஒன்றும் தெரியவில்லையே, ஐயா," என்றான் அவன் வருத்தத்துடன்.

உடனே நற்செய்தியாளர் "அதோ வெகு தொலைவில் ஒளிவீசுகிற வெளிச்சமாவது தெரிகிறதா?" என்று கேட்டார்.

"ஆம் ஐயா, ஏதோ வெளிச்சம்போல் தெரிகிறது" என்றான் அவன்.

“அந்த வெளிச்சத்தைப் பார்த்தபடியே நேராக நடந்துபோ, அருகில் சென்றால் குறுகிய வாசல் ஒன்று காணப்படும். அந்தக் கதவைத் தட்டிக் கேட்டால் அடுத்து நீ செய்யவேண்டியது என்ன வென்று சொல்லப்படும்," என்றார் நற்செய்தியாளர்.