மோட்சப்பயணம் (The Pilgrim's Progress) · முதலாம் பாகம்
பயணம் புறப்பட ஆர்வம்
ஜான் பனியன்
இந்தப் பரந்த உலகத்தைச் சுற்றிவரும்போது ஒரு முறை ஒரு மலையடிவாரத்தில் தங்கினேன். அங்கே ஒரு குகை இருந்தது. அதனுள் சென்று படுத்து உறங்கினேன். அப்போது மகிமையான கனவு ஒன்றைக் கண்டேன். இதோ அந்தக் கனவை அப்படியே கூறுகிறேன்.
கந்தை ஆடை அணிந்த ஒரு மனிதன் தனது வீட்டுக்கு முன்னால் எதிர்த்திசையைப் பார்த்தபடியே நிற்பதைக்கண்டேன். அவன் முதுகில் ஒரு பெரிய சுமை அழுத்திக்கொண்டிருந்தது. அவன் தன் கையிலிருந்த புத்தகத்தைத் திறந்து வாசிக்கத் துவங்கினான். அவன் வாசிக்க வாசிக்க கண்களிலிருந்து நீர் தாரைதாரையாக வழிந்தது. உடல் நடுங்கியது. இறுதியில் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் அவன் “ஐயோ, நான் என்ன செய்வேன்?" என்று கத்திப் புலம்பினான்.
பிறகு அவன் தன் வீட்டை நோக்கி மெதுவாக நடந்தான். தன் கவலையை வீட்டிலுள்ளவர்கள் கவனித்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான். எப்போதும்போலத் தனது வேலைகளைக் கவனிக்க முயன்றான். ஆனால் அவனால் தனது துக்கத்தை அடக்க முடியவில்லை.
அவனது நெஞ்சம் கனத்தது. தனது அருமை மனைவியையும் அன்புப் பிள்ளைகளையும் அருகே கூப்பிட்டான்.
“என் அன்பு மனைவியே, பிள்ளைகளே இதோ என் முதுகிலுள்ள பாரச்சுமை அதிகமாகிக்கொண்டே போவதால் நான் மிகவும் துன்பப்படுகிறேன். இந்தச் சுமை என்னையே நசுக்கிவிடும் போலிருக்கிறது. அதுமட்டுமின்றி நாம் வசிக்கும் இந்த நகரம் வானத்திலிருந்து வரும் நெருப்பினால் அழிக்கப்பட்டுவிடும் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியுமே இல்லையே. என் மனைவியே, அருமைப்பிள்ளைகளே, நீங்களும் என்னோடுகூட இந்த நெருப்பிலே அழிந்துபோவீர்களே, ஐயோ" என்று கூறிப் புலம்பினான்.
இதைக்கேட்ட அவன் மனைவியும், பிள்ளைகளும், உறவினர்களும் வியப்படைந்தார்கள். அவன் சொன்னபடி நிச்சயமாக நடக்கும் என்று எண்ணி அவர்கள் கலங்கவில்லை; அவன் பைத்தியம் பிடித்தவனைப்போலப் பிதற்றுகிறானே என்று எண்ணிக் கவலைப்பட்டார்கள். அவன் இரவு நெருங்கும் வேளையில் இவ்வாறு புலம்பியதால் சரியான உறக்கம் இல்லாமல் மூளை கொதிப்படைந்து இவ்வாறு பேசுகிறான் என்று எண்ணி அவனை உடனே படுக்கைக்கு அனுப்பினார்கள்.
ஆனால் இரவிலும் அவனால் தூங்கமுடியவில்லை. முன்போலவே துக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். அவனைப்பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்கள் படுத்து நன்றாக உறங்கிவிட்டார்கள். அவனோ இரவு முழுவதும் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தான்.
விடிந்தவுடன் அயல்வீட்டார் அவனிடம் வந்து அவன் நன்றாகத் தூங்கினானா என்று கேட்டார்கள். அவனோ இன்னும் அதிகக் கவலையுடன் புலம்பத் தொடங்கிவிட்டான். ஆனால் அவர்கள் அவன் பேச்சுக்குச் செவி கொடுக்காமல் மனதைக் கடினப்படுத்திக் கொண்டார்கள். சிலர் அவனைக் கடிந்துபேசினால்தான் இந்தக் கவலைகளை மறப்பான் என்றெண்ணி அவனிடம் கோபத்தோடு பேசினர்.
சிலர் அவனைக் கேலி செய்தனர். அவனோ இதைப் பொருள்படுத்தாமல் இருப்பதைக்கண்டு அவர்கள் அவனை விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள்.
அவன் சிலவேளைகளில் தனக்காகவும் பிறருக்காகவும் அழுது ஜெபிப்பான். அருகிலுள்ள வயல்வெளிகளில் தனியாக நடந்து சென்று அந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பான். சில வேளைகளில் துயர மிகுதியால் அழுது புலம்பினான். இவ்வாறு அவன் தனது நாள்களைக் கழித்து வந்தான்.