பாவத்தை அழித்தல் (The Mortification of Sin)

அத்தியாயம் II

ஜான் ஓவன்

I. பாவத்தின் ஆக்கினைத்தீர்ப்பு வல்லமையிலிருந்து நிச்சயமாக விடுவிக்கப்பட்ட மிகச்சிறந்த விசுவாசிகளும், தங்களுக்குள் வாசம்பண்ணுகிற பாவத்தின் வல்லமையை தங்களது வாழ்நாள் எல்லாம் அழிப்பதையே தங்களது பிரதான நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அப்போஸ்தலன் இவ்விதமாகவே சொல்லுகிறார், “பூமியிலிருக்கிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்” (). அவர் யாருக்குப் பேசுகிறார்? கிறிஸ்துவுடனேகூட “எழுந்திருந்தவர்களுக்கும்” (வசனம் 1), அவரோடேகூட “மரித்தவர்களுக்கும்” (வசனம் 3), கிறிஸ்துவைத் தங்களுக்கு ஜீவனாகக் கொண்டு, “அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுகிறவர்களுக்கும்” (வசனம் 4) பேசுகிறார். நீங்களே அழித்துப்போடுங்கள்; அதை உங்கள் தினசரி கிரியையாக்குங்கள்; உயிரோடிருக்கும் நாளெல்லாம் இடைவிடாமல் அதில் நிலைத்திருங்கள்; இந்த வேலையிலிருந்து ஒரு நாளும் ஓய்ந்திருக்க வேண்டாம்; பாவத்தைக் கொன்றுபோடுங்கள், இல்லையெனில் அது உங்களைக் கொன்றுபோடும். நீங்கள் கிறிஸ்துவுடனேகூட மெய்ம்மையாக மரித்திருப்பதும், அவரோடேகூட உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதும் இக்கிரியையிலிருந்து உங்களுக்கு விலக்கு அளிக்கமாட்டாது.

மேலும், நமக்குரிய இரட்சகராகிய கர்த்தர், தம்மில் கனிகொடுக்கிற எந்தக் கொடியையும், அதாவது மெய்யானதும் உயிருள்ளதுமான எந்தக் கிளையையும் தமது பிதா எவ்வாறு நடத்துகிறார் என்று விளக்குகிறார்: “அது அதிக கனிகொடுக்கும்படி அதைச் சுத்தம்பண்ணுகிறார்” (). அவர் அதைச் செப்பனிடுகிறார்; அது ஒரு நாளோ இரண்டு நாளோ அல்ல, அது இவ்வுலகில் கிளையாய் இருக்கும் நாளெல்லாம் அதைச் செப்பனிடுகிறார்.

மேலும், அப்போஸ்தலன் தன் சொந்தக் கொள்கை என்னவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறார், “என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (). “நான் இதைத் தினந்தோறும் செய்கிறேன்; இது என் ஜீவியத்தின் கிரியை; நான் இதைத் தவறுவிப்பதில்லை; இதுவே என் வேலை” என்று அவர் கூறுகிறார். விசுவாசிகளின் சாதாரண அளவுக்கு எட்டாதபடி கிருபையிலும், தரிசனங்களிலும், அனுகூலங்களிலும், சிலாக்கியங்களிலும், ஆறுதல்களிலும் ஈடற்ற விதமாய் உயர்த்தப்பட்டிருந்த பவுலுக்கே இது கிரியையும் வேலையுமாய் இருந்ததெனில், நாம் இவ்வுலகில் வாழும்போது இக்கிரியையிலிருந்தும் கடமையிலிருந்தும் நமக்கு விலக்கு உண்டு என்பதற்கு எங்கே அஸ்திபாரம் காண முடியும்? இதற்கான காரணங்களின் சுருக்கத்தை இவ்விதமாகக் கூறலாம்:

1. பாவத்தின் நிலைத்திருப்பு

நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பாவம் நாம் இவ்வுலகில் இருக்கும் நாளெல்லாம் எப்போதும் நிலைத்திருக்கிறது; ஆகையால், அது எந்நேரமும் அழிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. தேவனுடைய கற்பனைகளைப் பூரணமாய்க் கைக்கொள்ளுவதைக் குறித்தும், இப்பூவுலக ஜீவியத்தில் எய்தும் பூரணத்துவத்தைக் குறித்தும், பாவத்திற்கு முற்றிலும் பூரணமாய் மரித்திருப்பதைக் குறித்தும் மனிதர் செய்யும் வீணானதும், பேதைமையானதும், அறியாமையுள்ளதுமான தர்க்கங்களில் நான் இப்போது தலையிடவில்லை. அருவருப்பான அந்த உபதேசங்களைக் கூறுகிற மனிதர்கள் தேவனுடைய கற்பனைகளில் ஒன்றையாகிலும் கைக்கொள்ளுவதின் மெய்ப்பொருளை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்பதும், அவர்கள் பூரணத்துவத்தின் நிலைகளுக்கு மிகவும் கீழானவர்களாய் இருப்பதினால், கீழ்ப்படிதலின் பகுதிகளிலோ அல்லது உத்தம இருதயத்தோடே செய்யும் உலகளாவிய கீழ்ப்படிதலிலோ ஒருபோதும் பூரணத்துவத்தை அடையவில்லை என்பதும் மிகத் தெளிவு.

ஆகையால், நம்முடைய நாட்களில் பூரணத்துவத்தைக் குறித்துப் பேசின பலர் தங்களை ஞானிகளென்று எண்ணிக்கொண்டு, நன்மைக்கும் தீமைக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் அறியாதிருப்பதே பூரணத்துவம் என்று சாதித்தார்கள். நாம் நன்மை என்று சொல்லுகிற காரியங்களில் அவர்கள் பூரணராய் இருக்கிறார்கள் என்பதல்ல, மாறாக அவர்களுக்கு எல்லாமே ஒன்றாய் இருக்கிறது; அக்கிரமத்தின் உச்சக்கட்டமே அவர்களுடைய பூரணத்துவமாய் விளங்குகிறது.

ஜென்ம பாவத்தையும் நமக்குள்ளே வாசம்பண்ணும் பாவத்தையும் மறுதலிப்பதின் மூலமும், தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய தன்மையை மனிதர்களுடைய மாம்ச இருதயங்களுக்கு ஏற்றவாறு குறைத்து மதிப்பிடுவதின் மூலமும், அதற்கு ஒரு புதிய வழியைக் கண்டடைந்த மற்றவர்கள், கிறிஸ்துவினுடைய ஜீவனையும் விசுவாசிகளுக்குள் விளங்கும் அதின் வல்லமையையும் குறித்துத் தங்களுக்குள்ள அறியாமையைத் துலக்கமாய் வெளிப்படுத்தியதோடு அல்லாமல், தங்களது மாம்ச சிந்தையினாலே வீணாய் இருமாப்புக்கொண்டு, சுவிசேஷம் அறியாத ஒரு புதிய நீதியைக் கற்பித்துக் கொண்டார்கள்.

எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதிருக்கவும், தேவன் நமக்குச் செய்யாத காரியங்களை மற்ற மனிதர்களுடைய ஜீவியத்தைக் கொண்டு பெருமையாகப் பேசாதிருக்கவும் துணிகிற நம்மைப் பொறுத்தமட்டில், நாம் இவ்வுலகில் இருக்கும்வரை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பாவம் ஏதோ ஒரு அளவிலும் நிலையிலும் நமக்குள்ளே வாழ்கிறது என்றே கூறுகிறோம். “நான் அடைந்தாயிற்று, அல்லது அதற்குள் பூரணமடைந்தேன்” () என்று பேச நாம் துணியமாட்டோம். நாம் இங்கு வாழும் நாளெல்லாம் நம்முடைய “உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட வேண்டும்” (); புதிய சுபாவத்தின் புதுப்பித்தலுக்குத் தக்கதாகவே பழைய மனுஷனின் சிதைவுகளும் அழிவுகளும் ஏற்படுகின்றன.

நாம் இங்கிருக்கும்போது “அம்சமாய் அறிந்திருக்கிறோம்” (); எஞ்சியிருக்கும் அந்த அந்தகாரம் நம்முடைய “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அறிவிலே வளருகிறதினால்” () படிப்படியாக அகற்றப்பட வேண்டியதாய் இருக்கிறது; மேலும், “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; ஆதலால் நீங்கள் செய்யவேண்டும் என்று இருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு விலகுகிறீர்கள்” (). ஆகையால் நம்முடைய வெளிச்சத்தில் குறைவுள்ளவர்களாய் இருக்கிறதுபோல, நம்முடைய கீழ்ப்படிதலிலும் குறைவுள்ளவர்களாய் இருக்கிறோம் (). நாம் ஒரு “மரண சரீரத்தைக்” () கொண்டிருக்கிறோம்; நம்முடைய சரீரங்களின் மரணத்தினாலன்றி இதிலிருந்து நமக்கு விடுதலை இல்லை (). இப்போது, பாவம் நமக்குள்ளே இருக்கும்போதே அதை அழிப்பதும் கொன்றுபோடுவததும் நம்முடைய கடமையாய் இருக்கிறபடியால், நாம் இக்கிரியையில் நிலைத்திருக்க வேண்டும். ஒரு சத்துருவைக் கொல்லும்படி நியமிக்கப்பட்ட ஒருவன், அச்சத்துருவின் உயிர் அடங்குவதற்கு முன்பாகவே தன் அடிப் பிரயோகத்தை நிறுத்திவிடுவானெனில், அவன் தன் வேலையைப் பாதியளவே செய்தவன் ஆவான் (), (), ().

2. பாவத்தின் இடைவிடாத கிரியை

பாவம் நமக்குள்ளே நிலைத்திருக்கிறது மாத்திரமல்ல, அது இன்னும் கிரியை செய்கிறதாயும், மாம்சத்தின் செய்கைகளைப் பிறப்பிக்க இன்னும் பிரயாசப்படுகிறதாயும் இருக்கிறது. பாவம் நம்மைச் சும்மா விட்டுவிடும்போது நாமும் பாவத்தைச் சும்மா விட்டுவிடலாம்; ஆனால், பாவம் மிகவும் அமைதியாய் இருப்பதுபோல் தோன்றும் போதே அது மிகக் தந்திரமாய் அசைந்துகொண்டிருக்கிறது; தேங்கிநிற்கும் தண்ணீரே பெரும்பாலும் ஆழமுள்ளதாயிருப்பது போல, பாவத்திற்கு எதிராக நாம் செய்யும் ஆலோசனைகள் எல்லா நேரங்களிலும் எல்லா நிலைகளிலும், சற்றும் சந்தேகமில்லாத இடங்களிலும் கூட வீரியமுள்ளவைகளாய் இருக்க வேண்டும்.

பாவம் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறது மாத்திரமல்ல, “என் அவயவங்களில் இருக்கிற வேறொரு பிரமாணம் என் மனதின் பிரமாணத்தோடே போராடுகிறது” (); மேலும் “நமக்குள்ளே வாசம்பண்ணுகிற ஆவி நம்விடத்தில் பொறாமையாய் இச்சிக்கிறது” (). அது எப்போதும் இடைவிடாத கிரியையில் இருக்கிறது; “மாம்சம் ஆவிக்கு விரோதமாய் இச்சிக்கிறது” (); இச்சையானது எப்போதும் சோதித்து, பாவத்தைக் கர்ப்பந்தரிக்கிறது (). ஒவ்வொரு நன்னெறிச் செயலிலும் அது எப்போதும் தீமைக்கு ஏதுவாய் சாய்கிறது, அல்லது நன்மையானதைச் செய்யவொட்டாமல் தடுக்கிறது, அல்லது தேவனுடனான ஐக்கியத்திலிருந்து ஆவியைக் குலைத்துப்போடுகிறது.

அது தீமைக்கு ஏதுவாய் சாய்கிறது. “நான் விரும்பாத தீமையையே செய்கிறேன்” என்று அப்போஸ்தலன் கூறுகிறார் (). அது எதனால் உண்டாகிறது? “என் மாம்சத்திலாகிலும், நன்மை வாசம்பண்ணுகிறதில்லை” என்பதனாலேயாம். மேலும் அது நன்மையைச் செய்யவொட்டாமல் தடுக்கிறது: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் இருக்கிறேன்” (வசனம் 19). அதே காரணத்தினால்தான் நான் அதைச் செய்யாமலோ, அல்லது செய்ய வேண்டிய வண்ணமாகச் செய்யாமலோ போகிறேன்; என்னுடைய பரிசுத்தமான காரியங்கள் யாவும் இந்தப் பாவத்தினால் தீட்டுப்படுகின்றன. “மாம்சம் ஆவிக்கு விரோதமாய் இச்சிக்கிறது, ஆதலால் நீங்கள் செய்யவேண்டும் என்று இருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு விலகுகிறீர்கள்” (). அது நம்முடைய ஆவியைக் குலைத்துப் போடுகிறபடியால், “நம்மைச் சுலபமாய் நெருக்குகிற பாவம்” () என்று அழைக்கப்படுகிறது; இதினிமித்தமே அப்போஸ்தலன் அதைக் குறித்து மிகுந்த மனவேதனையோடு முறையிடுகிறார் (ரோம. 7). ஆகையால், பாவம் எப்போதும் கிரியை செய்கிறது, எப்போதும் கர்ப்பந்தரிக்கிறது, எப்போதும் வஞ்சிக்கிறது, சோதிக்கிறது.

தேவனுடனோ அல்லது தேவனுக்காகவோ தான் செய்த எந்தவொரு காரியத்திலும், நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பாவம் அதைக் கெடுப்பதற்குத் தன் கையை நீட்டவில்லை என்று எவரால் சொல்ல முடியும்? நம்முடைய வாழ்நாள் முழுவதிலும் அது இத்தொழிலை ஏதோ ஒரு அளவில் செய்துகொண்டே இருக்கும். அப்படியிருக்க, பாவம் எப்போதும் கிரியை செய்துகொண்டே இருக்குமெனில், நாமும் எப்போதும் அதை அழித்துக்கொண்டே இராவிட்டால், நாம் நிர்மூலமாகிப்போவோம். எவ்வித எதிர்ப்புமின்றித் தன் சத்துருக்கள் தன்மேல் மாறி மாறி அடிப் பிரயோகம் செய்ய இடமளித்துக்கொண்டு சும்மா நிற்கிற ஒருவன், முடிவிலே நிச்சயமாக முறியடிக்கப்படுவான்.

பாவமானது தந்திரமும், விழிப்புள்ளதும், பலமுள்ளதுமாய் இருந்து, நம்முடைய ஆத்துமாக்களைக் கொல்வதிலேயே எப்போதும் கண்ணும்கருத்துமாய் இருக்க, நாம் சோம்பேறிகளாயும், அசதியுள்ளவர்களாயும், மதியீனர்களாயும் இருந்து நம்முடைய சொந்த அழிவுக்கு நேராகச் செல்வோமெனில், ஆறுதலான ஒரு முடிவை நாம் எதிர்பார்க்க முடியுமோ? பாவமானது தோற்கடிக்கப்படும் அல்லது நம்மைத் தோற்கடிக்கும், அது ஜெயிக்கும் அல்லது ஜெயிக்கப்படும் என்ற போராட்டமில்லாத ஒரு நாளும் இல்லை; நாம் இவ்வுலகில் வாழும் நாளெல்லாம் இது இப்படியே இருக்கும்.

இப்போராட்டத்தில் பாவத்தோடு ஒரு உடன்படிக்கை செய்து, ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்ய யாரால் முடியுமோ, அவனை இக்கடமையிலிருந்து நான் விடுவிப்பேன்; (கீழ்ப்படிதலின் ஆவிக்குரிய தன்மையையும் பாவத்தின் தந்திரத்தையும் அறிந்த ஒருவனாய் இருக்கும் பட்சத்தில்) பாவம் அவனை ஏதாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு கடமையில் சும்மா விட்டுவிடுமெனில், அவன் தன் ஆத்துமாவை நோக்கி, “ஆத்துமாவே, நீ இளைப்பாறு” என்று இக்கடமையைக் குறித்துச் சொல்லிக்கொள்ளட்டும். அதன் கலக்கமூட்டும் கிளர்ச்சியிலிருந்து விடுதலை பெறும்படி ஏங்குகிற பரிசுத்தவான்கள், அதற்கு எதிராகத் தங்களுக்குப் பாதுகாப்பு தொடர்ச்சியான போராட்டத்தில் மாத்திரமே உண்டு என்பதை அறிவார்கள்.

3. பாவம் வளர இடமளிப்பதின் ஆபத்து

பாவம் போராடி, கிரியை செய்து, கிளர்ச்சி பண்ணி, தொல்லை கொடுத்து, கலக்கமுண்டாக்குவது மாத்திரமல்லாமல், அதை அப்படியே விட்டுவிட்டால், இடைவிடாமல் அதை அழிக்காதிருந்தால், அது பெரியதும், சாபத்தீடானதும், அவதூறானதும், ஆத்துமாவை அழிக்கக்கூடியதுமான பாவங்களைப் பிறப்பிக்கும். அதன் கிரியைகளும் கனிகளும் எவையென்று அப்போஸ்தலன் நமக்குத் தெரிவிக்கிறார், “மாம்சத்தின் கிரியைகள் வெளிப்படையாய் இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுசி, காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டங்கள் முதலானவைகளே” (). அது தாவீதினிடத்திலும் வேறு பலரிடத்திலும் என்ன செய்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பாவம் எப்போதும் உச்சக்கட்டத்தையே நோக்கமாகக் கொள்கிறது; அது சோதிக்கவோ அல்லது இச்சையூட்டவோ எழும்பும் ஒவ்வொரு முறையும், அதற்கேற்ற வழி கிடைக்குமெனில், அது அந்தத் தன்மையின் மிகக் கொடிய பாவமாகவே போய் முடியும். ஒவ்வொரு அசுசியான சிந்தையும் அல்லது பார்வையும் ஏதுவானால் விபசாரமாய் மாறும்; ஒவ்வொரு பேராசையும் ஒடுக்கலாய் மாறும்; அவிசுவாசத்தின் ஒவ்வொரு சிந்தையும், அது தலைதூக்க இடமளித்தால், தேவமறுப்பாய் (நாத்திகமாய்) மாறும்.

மனிதர்கள் ஒருவேளை பாவமானது தங்கள் இருதயங்களில் அவதூறான வார்த்தைகளைப் பேசாதபடி, அதாவது வெளிப்படையான பெரிய பாவத்திற்குத் தங்களைத் தூண்டாதபடி காத்துக்கொள்ளும் நிலையை அடையலாம்; ஆயினும், இச்சையின் ஒவ்வொரு எழுச்சியும், அதற்கேற்ற வழி கிடைக்குமெனில், அக்கிரமத்தின் உச்சக்கட்டத்திற்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்; அது ஒருபோதும் திருப்தியடையாத பாதாளத்தைப் போன்றது. பாவத்தின் வஞ்சகத்தில் ஒரு பெரிய பகுதி இதில்தான் அடங்கியிருக்கிறது; இதினாலேயே அது மனிதர்களைக் கடினப்படுத்துவதிலும் அவர்களின் அழிவிலும் வெற்றிபெறுகிறது (). அது தன் முதல் அசைவுகளிலும் ஆலோசனைகளிலும் அடக்கமுள்ளது போலத் தோன்றும், ஆனால் அவற்றின் மூலம் இருதயத்திற்குள் கால் பதித்துவிட்டால், அது தன் இடத்தை நிலைப்படுத்திக்கொண்டு, அதே தன்மையில் அடுத்தடுத்த நிலைகளுக்குத் தொடர்ந்து முன்னேறும்.

இந்த புதிய கிரியையும் முன்னோக்கிய நகர்வும், தேவனை விட்டுத் தான் ஏற்கனவே எவ்வளவு தூரம் விலகத் தொடங்கியிருக்கிறோம் என்பதை ஆத்துமா கவனியாமல் இருக்கச் செய்கிறது; இன்னும் அதிகமாய் முன்னேறாமல் இருந்தால் எல்லாம் ஓரளவுக்கு நலமாயிருக்கிறது என்று அது நினைக்கிறது; சுவிசேஷம் கோருகிற உணர்வின்படி ஆத்துமா எவ்வகையான அர்த்தத்தில் பாவத்தைக் குறித்து உணர்வற்றதாகிறதோ, அவ்வளவுக்கு அது கடினப்படுகிறது. ஆனால், பாவமோ தேவனை முற்றிலும் கைவிடுவதும் அவருக்கு விரோதமாய் நிற்பதுமே தனக்கு எல்லை என்று கொண்டிருக்கிறபடியால், அது இன்னும் முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது; அது தன் கடினத்தன்மையினால் தான் பிடித்த இடத்தை நிலைப்படுத்திக்கொண்டு, படிப்படியாகத் தன் உச்சக்கட்டத்தை நோக்கிச் செல்வது அதனுடைய சுபாவத்தினால் அல்ல, அதனுடைய வஞ்சகத்தினாலேயாம்.

இப்போது, பாவமழிப்பதைத் தவிர வேறொன்றும் இதைத் தடுக்க முடியாது; அது பாவத்தின் வேரை உலரச்செய்து, ஒவ்வொரு மணிநேரமும் அதின் தலைமேல் அடிக்கிறது, இதனால் பாவம் எதைக் குறிக்கோளாகக் கொண்டதோ அது முறியடிக்கப்படுகிறது. இவ்வுலகிலுள்ள மிகச்சிறந்த பரிசுத்தவானும் இக்கடமையைக் கைவிடுவானெனில், தன் தன்மையில் மற்றவர்கள் விழுந்ததுபோல அத்தனை சாபத்தீடான பாவங்களில் அவனும் விழுந்துபோவான் என்பது நிச்சயம்.

4. புதிய சுபாவத்தின் நோக்கம்

நமக்குள்ளே இருக்கும் பாவத்தையும் இச்சையையும் எதிர்ப்பதற்கான ஒரு தெய்வீகத் தத்துவத்தை நமக்குள்ளே கொண்டிருக்கத்தக்கதாகவே ஆவியானவரும் புதிய சுபாவமும் நமக்கு அருளப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாகும். “மாம்சம் ஆவிக்கு விரோதமாய் இச்சிக்கிறது.” சரி, பின்பு என்ன? “ஆவியும் மாம்சத்துக்கு விரோதமாய் இச்சிக்கிறது” (). மாம்சம் ஆவிக்கு விரோதமாய்க் கிரியை செய்வதுபோல, ஆவியானவர் அல்லது ஆவிக்குரிய புதிய சுபாவமும் மாம்சத்திற்கு விரோதமாய்க் கிரியை செய்யும் இயல்பைக் கொண்டிருக்கிறது (). நாம் தெய்வீகச் சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகி, இச்சையினால் உலகத்திலுண்டான கேடுகளுக்குத் தப்பியிருக்கிறோம்; மேலும், “என் அவயவங்களில் இருக்கிற வேறொரு பிரமாணமும், என் மனதின் பிரமாணமும்” உண்டு ().

இப்போது, இரண்டு போர்வீரர்கள் சண்டையிடும்போது, ஒருவனைக் கட்டிப்போட்டு அவன் தன் முழு பலத்தைக் காட்டாதபடி தடுத்து நிறுத்திவிட்டு, மற்றவனுக்குத் தன் இஷ்டப்படி அவனைக் காயப்படுத்தச் சுதந்திரம் கொடுப்பது உலகிலேயே மிகவும் அநீதியானதும் நியாயமற்றதுமான காரியமாகும்; இரண்டாவதாக, நம்முடைய நித்திய இரட்சிப்பிற்காகப் போராடுகிறவனைக் கட்டிப்போட்டுவிட்டு, நம்முடைய நித்திய அழிவைத் தேடி வன்முறையாய் முயலுகிறவனைச் சும்மா விட்டுவிடுவது உலகிலேயே ஆகாத மதியீனமான காரியமாகும். இப்போராட்டம் நம்முடைய ஜீவனுக்காகவும் ஆத்துமாவுக்காகவும் நடப்பதாகும். பாவமழிப்பிற்காக ஆவியானவரையும் புதிய சுபாவத்தையும் தினந்தோறும் பிரயோகிக்காமல் இருப்பது, நம்முடைய மிகப்பெரிய சத்துருவுக்கு எதிராக தேவன் நமக்குத் தந்திருக்கிற அந்த மேன்மையான துணையை அசட்டை செய்வதாகும்.

நாம் பெற்ற காரியங்களை உபயோகிக்கத் தவறினால், தேவன் நமக்கு இன்னும் அதிகமாய்க் கொடுப்பதைத் தமது கரத்தை நீட்டி நிறுத்திக்கொள்வது நீதியாயிருக்கும். அவருடைய கிருபைகளும் வரங்களும் நாம் பயன்படுத்தவும், பழகவும், வர்த்தகம் பண்ணவுமே நமக்கு அருளப்பட்டிருக்கின்றன. தினந்தோறும் பாவத்தை அழிக்காதிருப்பது, அதைச் செய்வதற்கான தத்துவத்தை நமக்கு அருளிய தேவனுடைய நன்மைகளுக்கும், தயவுக்கும், ஞானத்திற்கும், கிருபைக்கும், அன்பிற்கும் விரோதமாய்ப் பாவம் செய்வதாகும்.

5. அசதியினால் வரும் வீழ்ச்சி

இக்கடமையில் காட்டும் அசதி, ஆத்துமாவை அப்போஸ்தலன் தன் காரியத்தைக் குறித்து உறுதிபடக் கூறின நிலைக்கு முற்றிலும் மாறானதொரு நிலைக்குள் தள்ளிவிடும்: “எங்கள் புறம்பான மனிதன் அழிந்தும், உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” (). இவர்களிடத்திலோ உள்ளான மனிதன் அழிந்துபோகிறது, புறம்பான மனிதன் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகிறது. பாவமானது தாவீதின் வம்சத்தைப் போலவும், கிருபையானது சவுலின் வம்சத்தைப் போலவும் இருக்கிறது. ஆத்துமப் பயிற்சியும் வெற்றியுமே இருதயத்தில் கிருபையை வளர்க்கும் இரண்டு பிரதான காரியங்களாகும்; அதைச் சும்மா கிடக்கவிட்டால், அது வாடி அழியும்: அதற்கடுத்த காரியங்கள் சாகிறதற்கேதுவாய் இருக்கும் (); பாவம் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்குக் கால் பதித்துக் கொள்ளும் ().

இதையே நான் குறிப்பிடுகிறேன்: இக்கடமையைத் தவறுவிப்பதினால் கிருபை வாடிப்போகிறது, இச்சை செழித்து வளருகிறது, இருதயத்தின் நிலைமை மென்மேலும் சீர்கெட்டுப் போகிறது; இது பலரிடத்தில் எவ்வளவு கொடியதும் பயங்கரமானதுமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கர்த்தர் அறிவார். பாவமழித்தலை அசட்டை செய்வதினால் பாவம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுவிடுமெனில், அது ஆத்துமாவின் எலும்புகளை நொறுக்கிப்போடும் (), (); ஒரு மனிதனைப் பலவீனனும், வியாதியுள்ளவனும், சாகிறதற்கேதுவானவனுமாக்கிவிடும் (), இதனால் அவனால் நிமிர்ந்து பார்க்கவும் முடியாது (), (). ஏழை மனிதர்கள் அடிமேல் அடி பட்டும், காயம் மேல் காயம் பட்டும், தோல்வி மேல் தோல்வி உற்றும், தங்களை ஒரு வீரியமுள்ள எதிர்ப்பிற்கு நேராக எழுப்பாதிருக்கும்போது, பாவத்தின் வஞ்சகத்தினால் கடினப்படுவதையும் தங்கள் ஆத்துமாக்கள் இரத்தம் சிந்திச் சாவதையுமன்றி அவர்கள் வேறெதை எதிர்பார்க்க முடியும்? (2 யோவா. 8).

மெய்யாகவே, நம்முடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொரு நாளும் நடக்கும் இத்தகைய அசட்டையின் பயங்கரமான விளைவுகளைச் சிந்திப்பது துக்ககரமான காரியமாகும். தாழ்மையுள்ளவர்களும், உருகுகிற இருதயுள்ளவர்களும், நொறுங்குண்ட ஆத்துமாவை உடையவர்களுமாய் இருந்த கிறிஸ்தவர்கள் — தவறு செய்ய அஞ்சிய மென்மையான மனசாட்சியுள்ளவர்கள், தேவனுக்காகவும் அவருடைய வழிகளுக்காகவும், அவருடைய ஓய்வுநாட்களுக்காகவும் கட்டளைகளுக்காகவும் வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தவர்கள் — இக்கடமையில் விழித்திருக்க அசட்டை செய்ததினாலே, பூலோகசிந்தையுள்ளவர்களும், மாம்சசிந்தையுள்ளவர்களும், குளிர்ந்துபோனவர்களும், கோபக்காரர்களுமாய் மாறி, இவ்வுலக மனிதர்களோடும் உலகக் காரியங்களோடும் இணங்கிப்போய், மார்க்கத்திற்கு அவதூறையும் தங்களை அறிந்தவர்களுக்குப் பயங்கரமான சோதனையையும் உண்டாக்குவதை நாம் காண்கிறதில்லையோ?

உண்மை என்னவெனில், ஒருபுறம் பாவமழிப்பைக் கடினமானதும் முரட்டுத்தனமானதுமான ஒரு மனநிலையில் வைப்பதும் (இது பெரும்பாலும் உலகப் போக்கும், நியாயப்பிரமாணப் போக்கும், மற்றவர்களைக் குற்றப்படுத்துவதும், பட்சபாதமுள்ளதும், கோபம், பொறாமை, வஞ்சகம், பெருமை ஆகியவற்றோடு ஒத்துப்போவதுமாய் இருக்கிறது), மறுபுறம் சுயாதீனம், கிருபை மற்றும் ஏதேதோ சாக்குகளைக் கூறுவதுமாகிய இவற்றுக்கு இடையே, மெய்யான சுவிசேஷத்திற்குரிய பாவமழிப்பானது நம் மத்தியில் ஏறக்குறைய அற்றுப்போய்விட்டது; இதைக் குறித்துப் பின்பு பேசுவோம்.

6. பரிசுத்தத்தின் பூரணம்

“தேவபயத்தோடே பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்த வேண்டும்” என்பதும் (), நாளுக்கு நாள் “கிருபையிலே வளர வேண்டும்” என்பதும் (), (), நம்முடைய “உள்ளான மனிதனை நாளுக்கு நாள் புதிதாக்க வேண்டும்” என்பதும் நம்முடைய கடமையாய் இருக்கிறது (). இப்போது, தினந்தோறும் பாவத்தை அழிக்காமல் இதைச் செய்ய முடியாது. பாவமானது பரிசுத்தத்தின் ஒவ்வொரு செயலுக்கும், நாம் வளரும் ஒவ்வொரு நிலைக்கும் விரோதமாகத் தன் பலத்தைக் காட்டுகிறது. தன் இச்சைகளின் மேல் மிதித்து நடக்காத ஒருவன் தான் பரிசுத்தத்தில் முன்னேறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். இவ்வழியில் பாவத்தைக் கொல்லாதவன் தன் பிரயாணத்தின் முடிவை நோக்கி ஒரு அடியும் எடுத்து வைக்கவில்லை. பாவமழிப்பதில் எவ்வித எதிர்ப்பையும் காணாதவனும், ஒவ்வொரு காரியத்திலும் அதை அழிப்பதற்குத் தன்னை ஒப்புக்கொடுக்காதவனுமாய் இருக்கிறவன், அதனோடு சமாதானமாய் இருக்கிறானேயன்றி அதற்கு மரிக்கவில்லை.

அப்படியானால், பின்வரும் நம்முடைய பிரசங்கத்தின் முதலாம் பொதுக் கொள்கை இதுவேயாகும்: கிறிஸ்துவின் சிலுவையில் எல்லாப்பாவங்களும், ஒவ்வொரு பாவமும் தகுதியின்படி அழிக்கப்பட்டிருந்தாலும்; நம்முடைய முதலாம் மனந்திரும்புதலில் பாவ உணர்வு, பாவத்திற்காகத் தாழ்மைப்படுதல், மற்றும் அதற்கு எதிரானதுமாய் அதை அழிக்கக்கூடியதுமான ஒரு புதிய தத்துவத்தின் நாட்டம் ஆகியவற்றின் மூலம் உலகளாவிய பாவமழிப்பிற்கு மெய்யான அஸ்திபாரம் இடப்பட்டிருந்தாலும்; விசுவாசிகள் இவ்வுலகில் வாழும் நாளெல்லாம் அவர்களில் மிகச்சிறந்தவர்களிடத்திலும் பாவம் இன்னும் நிலைத்திருந்து, கிரியை செய்து வருவதினால், தினந்தோறும் இடைவிடாமல் அதை அழிப்பது அவர்களது வாழ்நாள் முழுவதிலும் அவர்கள்மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது.

அடுத்த கொள்கையை ஆராயப் புகுவதற்கு முன்பாக, இந்த நாட்களிலுள்ள மார்க்க அறிக்கை செய்கிற பலரைக் குறித்து நான் வழியிலே முறையிடாமல் இருக்க முடியாது; அவர்கள் எதிர்பார்க்கப்படும் பாவமழிப்பின் பெரியதும் துலக்கமானதுமான கனிகளைத் தருவதற்குப் பதிலாக, அதின் இலைகளைக் கூடக் கொண்டிருக்கக் காண்பது அரிதாயிருக்கிறது. மெய்யாகவே, இந்தத் தலைமுறையின் மனிதர்கள்மேல் ஒரு பெரிய வெளிச்சம் விழுந்திருக்கிறது; அதோடுகூடப் பல ஆவிக்குரிய வரங்களும் அருளப்பட்டிருக்கின்றன, இவை வேறு சில காரணங்களோடு சேர்ந்து, மார்க்க அறிக்கை செய்கிறவர்களின் எல்லையையும் அறிக்கையிடுதலைையும் ஆச்சரியப்படத்தக்க விதமாய் விரிவுபடுத்தியிருக்கின்றன; அவர்களும் அதுவும் மிகவும் பெருகியிருக்கிறார்கள்.

இதினிமித்தம் ஒவ்வொரு மூலையிலும் மார்க்கத்தைக் குறித்தும் மார்க்கக் கடமைகளைக் குறித்தும் சத்தம் கேட்கிறது, பிரசங்கங்கள் ஏராளமாய் நடக்கின்றன; அதுவும் முற்காலத்தைப் போல வெற்றுப் பேச்சாகவும், லேசானதாகவும், அற்பமானதாகவும், வீணானதாகவும் இராமல் ஆவிக்குரிய வரத்தின் நல்ல அளவைக் கொண்டிருக்கிறது; எனவே, விசுவாசிகளின் எண்ணிக்கையை வெளிச்சம், வரங்கள், மற்றும் அறிக்கையிடுதலைக் கொண்டு அளவிடுவீர்களானால், சபையானது, “இவர்களை எனக்குப் பெற்றவள் யார்?” என்று சொல்ல இடமுண்டு.

ஆனால், கிறிஸ்தவர்களைப் பிரித்துக் காட்டுகிற இந்த மகத்துவமான கிருபையைக் கொண்டு நீங்கள் அவர்களை அளவிடுவீர்களானால், அவர்களின் எண்ணிக்கை அவ்வளவு பெருகியிருக்கக் காணமாட்டீர்கள். இந்த வெளிச்சத்தின் நாட்களில் தன் மனந்திரும்புதலைப் பெற்றுக்கொண்டு, முற்காலத்து மனிதர்களில் சிலரே ஏதோ ஒரு மட்டில் அறிந்திருந்த ஆவிக்குரிய தன்மையைக் குறித்துப் பேசி, அறிக்கை பண்ணுகிறவர்களில் (நான் அவர்களைக் குற்றப்படுத்தவில்லை, ஆயினும் கர்த்தர் தங்களுக்குச் செய்த காரியங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசுகிறவர்களில்) மிகவும் பரிதாபகரமான, பாவமழியாத இருதயத்தின் சான்றுகளை வெளிப்படுத்தாத அறிக்கைக்காரன் எங்கேனும் உண்டோ? காலத்தை வீணாய்க் கழிப்பதும், சோம்பேறித்தனமும், தங்கள் கடமைகளில் பிரயோஜனமற்றவர்களாய் இருப்பதும், பொறாமை, சண்டை, விரோதம், வைராக்கியம், கோபம், பெருமை, உலக சிநேகம், சுயநலம் (1 கொரி. 1) ஆகியவையே கிறிஸ்தவர்களின் அடையாளங்கள் எனில், அவை நம்விடத்திலும் நம் மத்தியிலும் ஏராளமாய் இருக்கின்றன.

மேலும், மிகுந்த வெளிச்சத்தைப் பெற்று, அது இரட்சிப்பிற்குரியது என்று நாம் நம்புகிறவர்களுக்கே நிலைமை இப்படி இருக்குமெனில், தங்களைப் பக்தியுள்ளவர்கள் என்று எண்ணிக்கொண்டு, சுவிசேஷத்தின் வெளிச்சத்தை அசட்டை செய்கிற சிலரைக் குறித்து நாம் என்ன சொல்வோம்? நாம் பேசிக்கொண்டிருக்கிற இக்கடமையைக் குறித்து, மனிதர்கள் சில நேரங்களில் தங்கள் புறம்பான அனுகூலங்களைத் தங்களுக்கு மறுப்பது மாத்திரமே பாவமழித்தல் என்று எண்ணியிருக்கிறார்கள்; அது இக்கடமையின் மிகக் கடைசியான ஒரு கிளையாய் இருந்தும், அதையும் அவர்கள் எப்போதாவது ஒருமுறையே செய்கிறார்கள். நல்ல கர்த்தர் நம்முடைய பிணிகளைக் குணமாக்கும்படி பாவமழிப்பின் ஆவியை அனுப்பியருளுவாராக, இல்லையெனில் நாம் மிகவும் பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறோம்!

பாவமழியாத அறிக்கைக்காரன் ஒவ்வொருவனிடத்திலும் நிச்சயமாக இரண்டு தீமைகள் பின்தொடருகின்றன; முதலாவது அவனுக்குள்ளேயும், மற்றொன்று மற்றவர்களைப் பொறுத்தமட்டிலும் ஆகும்:

1. அவனுக்குள்ளே: அவன் என்னதான் சாக்குப்போக்குச் சொன்னாலும், அவன் பாவத்தைக் குறித்து, மிகக் குறைவாகவே, விசேஷமாய் தினசரி பலவீனத்தினால் வரும் பாவங்களைக் குறித்துச் சுலபமாய் எண்ணுகிறான். பாவமழியாத ஒரு ஜீவியத்தின் வேர் என்னவெனில், இருதயத்தில் எவ்வித கசப்புமின்றிப் பாவத்தைச் செரித்துக்கொள்வதேயாகும். ஒரு மனிதன் தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் குறித்துத் தன் மனக்கற்பனையில் ஒரு தவறான எண்ணத்தைக் கொண்டு, எவ்வித கசப்புமின்றித் தினசரி பாவங்களை விழுங்கிச் செரித்துக்கொள்ள முற்படுவானெனில், அவன் தேவனுடைய கிருபையைக் காமவிகாரமாய் மாற்றுவதற்கும், பாவத்தின் வஞ்சகத்தினாலே கடினப்படுவதற்கும் மிக அருகில் நிற்கிறான் என்று அர்த்தம்.

உலகில் வஞ்சகமுள்ளதும் சீர்கெட்டதுமான ஒரு இருதயத்திற்கு இதைவிடப் பெரிய சான்று வேறொன்றும் இல்லை. நம்மைச் சுத்திகரிக்கும்படி சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தையும் (), (), நமக்கு மனந்திரும்புதலை அருளும்படி உயர்த்தப்பட்ட கிறிஸ்துவின் மேன்மையையும் (), அவபக்தியை வெறுக்கும்படி நமக்குக் கற்பிக்கிற கிருபையின் உபதேசத்தையும் () பாவத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்துவது, முடிவிலே எலும்புகளை நொறுக்கிப்போடும் ஒரு கிளர்ச்சியாகும். நாம் வாழும் இந்நாட்களில் விசுவாச துரோகிகளாய் விலகிப்போன பெரும்பாலான அறிக்கைக்காரர்கள் இந்த வாசல் வழியாகவே வெளியேறியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் பாவ உணர்வைக் கொண்டிருந்தார்கள்; அது அவர்களைக் கடமைகளைச் செய்ய வைத்து, அறிக்கை பண்ணும் நிலைக்கும் கொண்டுவந்தது; இவ்விதமாய் அவர்கள் “கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுசிகளுக்குத் தப்பினார்கள்” (). ஆனால், சுவிசேஷத்தின் உபதேசங்களை அறிந்துகொண்ட பின்பு, தங்களுக்குள் மெய்யான தெய்வீகத் தத்துவம் இல்லாததினால் கடமைகளைச் செய்யச் சலிப்படைந்து, கிருபையின் உபதேசத்தைச் சாக்காகக் கொண்டு தங்களது பற்பல அசட்டைகளுக்குத் தாங்களே ஆதரவு தேடிக்கொண்டார்கள். இப்போது, இந்தத் தீமை அவர்களைப் பிடித்துக்கொண்டவுடன், அவர்கள் சீக்கிரமாய் அழிவுக்குள் தள்ளப்பட்டார்கள்.

2. மற்றவர்களுக்கு: இது இரண்டு காரியங்களினிமித்தம் மற்றவர்கள்மேல் ஒரு பொல்லாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது:

  1. அது மற்றவர்களைக் கடினப்படுத்துகிறது; அதாவது, தங்களும் மிகச்சிறந்த அறிக்கைக்காரர்களைப் போல நல்ல நிலைமையில்தான் இருக்கிறோம் என்றொரு எண்ணத்தை அவர்களுக்குள் உண்டாக்குகிறது. பாவமழித்தல் இல்லாததினால் அந்த அறிக்கைக்காரர்களிடத்தில் மற்றவர்கள் எதைக் கண்டாலும், அது பழுதடைந்ததாகவே காணப்படுவதால் அவர்களிடம் மதிப்பற்றுப் போகிறது. அவர்கள் மார்க்கத்திற்காக வைராக்கியம் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அது நீடியசாந்தமும் உலகளாவிய நீதியுமற்றதாக இருக்கிறது. அவர்கள் ஆடம்பரத்தை வெறுக்கிறார்கள், ஆனால் உலகசிநேகத்தைக் கொண்டிருக்கிறார்கள்; உலகத்தை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள், ஆனால் தங்களுக்குப் பிரியமாய் மாத்திரம் ஜீவித்து, பூமியிலே கிருபை செய்வதைக் குறித்துக் கவலைப்படாமல் இருக்கிறார்கள்; அல்லது ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பேசி, வீணாய் வாழ்கிறார்கள்; தேவனுடனான ஐக்கியத்தைக் குறித்துப் பேசி, எல்லா வழிகளிலும் உலகத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கிறார்கள்; பாவமன்னிப்பைக் குறித்துப் பெருமை பேசி, மற்றவர்களை ஒருபோதும் மன்னிப்பதில்லை. இத்தகைய காரியங்களைக் கொண்டுதான் பாவங்கெட்ட மனிதர்கள் தங்களது இரட்சிக்கப்படாத நிலையில் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்கள்.
  2. தாங்களும் இவர்களுடைய நிலைக்கு வந்துவிட்டால் தங்களுக்கு நன்மையாய் இருக்கும் என்று அவர்களை நம்ப வைப்பதின் மூலம் அவர்களை வஞ்சிக்கிறார்கள்; மார்க்கத்தில் நற்பெயர் எடுப்பது என்ற பெரிய சோதனையோடு போராடுவது அவர்களுக்கு எளிதான காரியமாகிவிடுகிறது; புறம்பே காணப்படுகிற காரியங்களில் அவர்கள் இவர்களை விட வெகுதூரம் முன்னேறினாலும், நித்திய ஜீவனுக்குக் குறைவுள்ளவர்களாய் முடிகிறார்கள். பாவமழியாத இத்தகைய ஜீவியத்தைக் குறித்தும், அதிலுள்ள தீமைகளைக் குறித்தும் பின்பு விரிவாகக் காண்போம்.